இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி வென்றது. 

அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை (21ம் தேதி) தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால், இரு அணிகளுமே தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளன. 

ஏற்கனவே 360 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் கோலோச்சும் இந்திய அணி, கூடுதலாக 120 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் நீடிக்கும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் சொந்த மண்ணில் தொடரை இழந்துவிடக்கூடாது என்ற உறுதியில் நியூசிலாந்து அணி உள்ளது. 

நியூசிலாந்து அணிக்கு சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலம் என்றாலும், இந்திய அணியில் கோலி, புஜரா, ரஹானே, அஷ்வின் ஆகிய சீனியர் வீரர்கள் உள்ளனர். இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். இந்திய அணியில் புஜாரா, கோலி, ரஹானே என்றால், நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், டெய்லர் ஆகிய அனுபவ வீரர்கள் உள்ளனர். டிரெண்ட் போல்ட் அணிக்கு திரும்பிவிட்டதால் நியூசிலாந்து அணியின் பவுலிங் யூனிட்டும் வலுவாக உள்ளது. 

இந்திய அணியின் ஒரே ஒரு பலவீனம் என்னவென்றால், தொடக்க ஜோடி தான். ஏனெனில் ரோஹித் சர்மா காயத்தால் தொடரிலிருந்து விலகியதால், மயன்க் அகர்வாலும் பிரித்வி ஷாவும் தொடக்க வீரர்களாக இறங்கவுள்ளனர். இவர்கள் இருவருமே பெரியளவில் டெஸ்ட் போட்டி ஆடிய அனுபவமில்லாதவர்கள். அனுபவமில்லாமல் இருந்தாலும் இருவரும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதால் சிறப்பாக ஆடிவிடுவார்கள் என்ற நம்பிக்கை அணி நிர்வாகத்துக்கும் ரசிகர்களுக்கும் உள்ளது. 

Also Read - நான் எதிர்கொண்டதுலயே அவரோட பவுலிங்தான் ரொம்ப கஷ்டமா இருந்தது.. ஷேன் வாட்சனை மிரட்டிய ஃபாஸ்ட் பவுலர்

இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஜோடி குறித்து பேசியுள்ள நியூசிலாந்து அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் டிம் சௌதி, இந்திய அணியில் ஒருசில சீனியர் வீரர்கள் காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. ஆனால் இந்திய அணியில் போதுமான அளவிற்கு திறமையான வீரர்கள் நிறைய உள்ளனர். இந்திய அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் அவர்கள் முன்வந்து அந்த பணியை செவ்வனே செய்துகொடுக்கின்றனர். இந்திய அணியின் இளம் வீரர்கள் ஹாமில்டனில் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள். அவர்கள்(மயன்க், பிரித்வி, கில்) அனுபவமில்லாதவர்களாக இருந்தாலும், மிகவும் திறமையான கிளாஸான பேட்ஸ்மேன்கள் என்று டிம் சௌதி தெரிவித்துள்ளார்.