கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 900ஐ கடந்துவிட்ட நிலையில், பலியானோர் எண்ணிக்கை 20ஐ தாண்டிவிட்டது. 

கொரோனா, சமூக தொற்றாக பரவுவதை தடுக்கும் வகையில், இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, நாட்டு மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை செய்யுங்கள் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். 

பிரதமர் மோடி கோரிக்கை விடுத்த அடுத்த சில நிமிடங்களில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.25 கோடி நிதியுதவி செய்தார். டாடா நிறுவனம் ரூ.1500 கோடி நிதியுதவி செய்தது.

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ரூ.52 லட்சம் நிதியுதவி அளிப்பதாக டுவீட் செய்தார். அதில், 31 லட்சம் ரூபாய் பிரதமர் நிதிக்கும், 21 லட்சம் ரூபாயை உத்தர பிரதேச மாநில முதல்வரின் பொது நிவாரண நிதிக்கும் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

சுரேஷ் ரெய்னா ரூ.52 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்து போட்ட டுவீட்டை கண்ட, பிரதமர் மோடி, Thats a Brilliant fifty  என்று கிரிக்கெட் வீரருக்கு கிரிக்கெட் பாணியிலேயே பதிலளித்தார். 

கங்குலி, சச்சின் டெண்டுல்கர், பிவி சிந்து ஆகியோர் பிரதமர் மோடி நிதி கோருவதற்கு முன்பாகவே நிதி வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.