ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ராஜ்கோட்டில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் வழக்கம்போலவே இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடினர். ரோஹித்தும் ஷிகர் தவானும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் 42 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கோலியும் தவானும் இணைந்து நன்றாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். தவான் 96 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். கோலி 78 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த கேஎல் ராகுல், அதிரடியாக பேட்டிங் ஆடி 52 பந்தில் 80 ரன்களை குவித்தார். இதையடுத்து இந்திய அணி 50 ஓவரில் 340 ரன்களை குவித்தது. 

Also Read - அதெல்லாம் முடியாதுங்க.. தோனி விஷயத்தில் கங்குலி கறார்

341 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னரை ஆரம்பத்திலேயே ஷமி வீழ்த்திவிட்டார். வார்னர் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கேப்டன் ஆரோன் ஃபின்ச்சுடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் நிதானமாக தொடங்கி, விக்கெட்டை இழந்துவிடாமல் கவனமாக ஆடினர். களத்தில் நிலைத்த பின்னர் அடித்து ஆட தொடங்கினர். ஷமி மற்றும் சைனியின் ஓவர்களில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி மளமளவென ஸ்கோரை உயர்த்திவிட்டு, மீண்டும் நிதானத்தை கடைபிடிக்க தொடங்கினர். 

இவ்வாறு இருவரும் சாமர்த்தியமாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், ஜடேஜாவின் பந்தில் சற்று அசந்த ஃபின்ச்சை அபாரமாக ஸ்டம்பிங் செய்து அனுப்பினார் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல். அதன்பின்னர் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார் லபுஷேன். ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய லபுஷேன், வெகு சிறப்பாக ஆடினார். நெருக்கடியான நிலையில், முதல் இன்னிங்ஸை ஆட வந்த லபுஷேன், எந்தவித பதற்றமோ தடுமாற்றமோ இல்லாமல், பும்ரா, ஷமி, குல்தீப், ஜடேஜா, சைனி ஆகியோரின் பவுலிங்கை எதிர்கொண்டு சிறப்பாக அடித்து ஆடினார். ஸ்மித்தும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். 

ஸ்மித் - லபுஷேன் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது. லபுஷேன், 46 ரன்களில் ஜடேஜாவின் பந்தில் தூக்கியடித்து ஆட்டமிழந்தார். அறிமுக இன்னிங்ஸில் அரைசதத்தை வெறும் 4 ரன்களில் தவறவிட்டார். ஸ்மித் - லபுஷேன் பார்ட்னர்ஷிப்பை உடைத்து பிரேக் கொடுத்தார் ஜடேஜா. 

அதைவிட பெரிய பிரேக் என்றால் அது குல்தீப் கொடுத்ததுதான். லபுஷேன் ஆட்டமிழந்த பிறகும், ஸ்மித் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து கொண்டிருந்தார். இதற்கிடையே அலெக்ஸ் கேரி 18 ரன்களில் ஆட்டமிழக்க, இவையெதுவுமே ஸ்மித்தின் ஆட்டத்தை பாதிக்கவேயில்லை. சிறப்பாக ஆடிய ஸ்மித், சதத்தை நெருங்கினார். ஆனால் 98 ரன்களில் அவரை போல்டாக்கி இந்திய அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்து கொடுத்தார் குல்தீப் யாதவ். 

அதன்பின்னர் அஷ்டன் அகர் அடித்து ஆடினார். ஆனாலும் வெற்றிக்கு தேவைப்பட்ட ரன்ரேட் அதிகமாகிக்கொண்டே இருந்ததால், ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. அந்த அழுத்தத்திலேயே அஷ்டன் டர்னர், அகர் ஆகியோர் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆஸ்திரேலிய அணி 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. 

Also Read - டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் ஆல்ரவுண்டர்களுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ்.. கிரிக்கெட் வரலாற்றில் 7வது வீரர்

போட்டிக்கு பின்னர், இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஸ்டீவ் ஸ்மித், 30-40 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அதுதான் எங்கள் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். மூவரில் ஒருவர் அவுட்டாகாமல் கூட கொஞ்ச நேரம் ஆடியிருந்தால், ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கக்கூடும். லபுஷேன் அறிமுக இன்னிங்ஸிலேயே அபாரமாக ஆடினார். ஓவருக்கு குறைந்தது 6 ரன்கள் வீதம், ரன்ரேட் குறையாமல் எடுத்துக்கொண்டிருந்தோம். நல்ல கிரிக்கெட் ஷாட்டுகளை ஆடினோம். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. 30-40 ஓவர்களுக்கு இடையே 3 விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு காரணம் என்று ஸ்மித் தெரிவித்தார்.