1983ம் ஆண்டுக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து தோனி தலைமையிலான இந்திய அணி, 2011ல் உலக கோப்பையை வென்று அசத்தியது. இறுதி போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. இந்த போட்டியை அவ்வளவு எளிதாக கிரிக்கெட் ரசிகர்களால் மறந்துவிட முடியாது. 

மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே நடையை கட்ட, சச்சினும் 18 ரன்களில் வெளியேற, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு, காம்பீர் - கோலி இணை பொறுப்பாக ஆடி மூன்றாவது விக்கெட்டிற்கு ஓரளவு ரன்களை குவித்தது. பிறகு காம்பீர் மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியில் முக்கியமான இன்னிங்ஸை ஆடிய கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழக்க, தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். 

இந்த போட்டியில் 3வது விக்கெட்டாக கோலி அவுட்டான பிறகு நல்ல ஃபார்மில் இருந்த யுவராஜ், பேட்டிங் ஆட செல்லாமல், தோனி சென்றார். தோனி சிறப்பாக ஆடி, இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் கூட, யுவராஜுக்கு முன்னால் தோனி ஏன் பேட்டிங் ஆட சென்றார் என்பது பலருக்கும் சந்தேகமாகவே இருந்தது. 

இதுகுறித்து ஏற்கனவே விளக்கமளித்திருந்த தோனி, முரளிதரனின் பவுலிங்கை தன்னால் சிறப்பாக எதிர்கொண்டு ஆடமுடியும் என்பதால், யுவராஜுக்கு முன் தான் பேட்டிங் ஆட விரும்பியதாகவும், அந்த விருப்பத்தை பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனிடம் கூற, அவரும் ஒப்புதல் அளித்ததால், யுவராஜுக்கு முன் இறங்கியதாகவும் தோனி தெரிவித்திருந்தார்.

ஆனால் சேவாக்கோ, யுவராஜுக்கு முன் தோனியை இறக்கியது சச்சின் டெண்டுல்கரின் ஐடியா என்று தெரிவித்திருந்தார். எனவே சச்சின் சொல்லித்தான் யுவராஜுக்கு முன் தோனி இறங்கினாரா அல்லது அது தோனியின் சொந்த முடிவா என்ற சந்தேகம் எழுந்தது. 

இந்நிலையில், அண்மையில் இதுகுறித்து பேசியிருந்த சுரேஷ் ரெய்னாவும், அது தோனியின் முடிவு என்கிற ரீதியில் தான் பேசியிருந்தார். அதாவது தோனி சொன்ன அதே விஷயத்தைத்தான் ரெய்னாவும் கூறினார்.

எனவே சச்சின் சொல்லித்தான் தோனி இறங்கினாரா அல்லது தோனியின் சுய முடிவா? என்ற கேள்வியும் சேவாக் சொன்னது உண்மையா அல்லது தோனி சொன்னது உண்மையா ஆகிய கேள்விகள் எழுந்தன. 

இதற்கு சச்சின் பதில் சொன்னால்தான் மட்டும் தெளிவு கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், அவர் தான் தோனியை யுவராஜுக்கு முன் இறங்க சொன்னதாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், கம்பீர் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். அதனால் அவருக்கு சிங்கிள் ரொடேட் செய்து கொடுத்தால் போதும். அதை தோனி சிறப்பாக செய்வார் என்பதால் கம்பீருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆட தோனி சரியாக இருப்பார் என்று நான் தான் சேவாக்கிடம் சொல்லியனுப்பினேன்.

தோனியிடம் அவர் யுவராஜுக்கு முன் இறங்கும் ஐடியாவை பரிசீலிக்குமாறு கூறினேன். அதன்பின்னர் தான் தோனி, பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனிடம் பேசினார். அதன்பின்னர் கிறிஸ்டன் உள்ளே வந்து என்னிடம் கேட்டார். அதன்பின்னர் நாங்கள் நால்வரும்(சச்சின் -சேவாக் - தோனி - கிறிஸ்டன்) இணைந்து ஆலோசித்தோம். கிறிஸ்டனும் தோனீயும் ஒப்புக்கொண்டதையடுத்து தோனி இறங்கினார் என்று சச்சின் தெரிவித்தார்.

சச்சின் சொல்லித்தான் தோனி, கிறிஸ்டனிடம் சென்று யுவராஜுக்கு முன், தான் இறங்குவது குறித்து ஆலோசித்துள்ளார். ஆனால் தோனி ஏற்கனவே இதுகுறித்து பேசியபோது, சச்சினின் ஆலோசனையின் படிதான், யுவராஜுக்கு முன் இறங்கியதாக சொல்லவில்லை.