இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழும் புஜாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தூணாக திகழ்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டுக்கு பிறகு, இந்திய அணியில் அவரது இடத்தை நிரப்பியவர் புஜாரா. 

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்களையும் வெற்றிகளையும் குவித்து கொடுக்கும் புஜாரா, ராகுல் டிராவிட்டுடன் ஒப்பிடப்படுகிறார். புஜாரா இதுவரை 75 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5740 ரன்களை குவித்துள்ளார். 75 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தாலும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. டி20 அணியில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால் ஒருநாள் அணியில் கூட கிடைக்கவில்லை. 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், ராகுல் டிராவிட்டுடனான ஒப்பீடு குறித்து பேசியுள்ளார் புஜாரா. 

”ராகுல் டிராவிட்டுடன் என்னை ஒப்பிடுவதை நான் கௌரவமாக கருதுகிறேன். ஆனால் அது சரியான ஒப்பீடு அல்ல. நான் எனது கெரியரில் சாதிக்க இன்னும் நிறைய இருக்கிறது. ராகுல் டிராவிட் பாய்(மரியாதையாக) மூன்றுவிதமான கிரிக்கெட்டிலும் ஆடி டெஸ்ட் மற்றும் ஒருநாள் இரண்டிலுமே தலா 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த மிகச்சிறந்த வீரர். டி20 போட்டிகளில் கூட அவர் ஆடியுள்ளார். நான் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். ராகுல் டிராவிட்டிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளும் வயதில் இருக்கிறேன். அதை செய்தும் கொண்டிருக்கிறேன். அவரை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொண்டு ஆலோசனைகளை பெற முடியும் என்று புஜாரா கூறியுள்ளார். 

Also Read - டாப் ஃபார்மில் ஸ்டம்ப்புகளை கழட்டி எறிந்த பும்ரா, ஷமி.. வீடியோ

ராகுல் டிராவிட் அனைத்து விதமான போட்டிகளிலும் தலைசிறந்து விளங்கியவர். நான் டெஸ்ட்டில் மட்டும்தான் ஆடிக்கொண்டிருக்கிறேன். எனவே என்னை ராகுல் டிராவிட்டுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று வெளிப்படையாக நிதர்சனத்தை கூறியுள்ளார் புஜாரா.