இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பங்காற்றியவர் தோனி. ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை(2011), டி20 உலக கோப்பை(2007), சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன்.

தோனி நீண்ட போராட்டங்களுக்கும் கஷ்டங்களுக்கும் பிறகு ஒருவழியாக 2004 டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். தோனி இந்திய அணியில் இடம்பிடிக்க பட்ட கஷ்டத்திற்கு சற்றும் குறைவில்லாமல், அவரது கெரியரின் ஆரம்ப கட்டத்தில் கஷ்டப்பட்டார். 

பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய இரண்டிலுமே சொதப்பினார். அந்த காலக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல் ஆகிய விக்கெட் கீப்பர்கள் வரிசைகட்டி இருந்ததால் கிடைத்த வாய்ப்புகளில் தனது திறமையை நிரூபித்து அணியில் தனக்கான இடத்தை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் தோனி. ஆனால் அவர் அறிமுக தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக சரியாக ஆடவில்லை.

அவர் ஆரம்பத்தில் சில போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பினாலும், அவர் மீது நம்பிக்கை வைத்து அப்போதைய கேப்டன் கங்குலி, அவருக்கு தொடர் வாய்ப்புகள் அளித்தார்.

தன் மீது கேப்டனும் அணி நிர்வாகமும் வைத்திருந்த நம்பிக்கையை வீணடிக்காமல், 2005ம் ஆண்டு இதே தினத்தில்(ஏப்ரல் 5) பாகிஸ்தானுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த தோனி, தன்னால் மிகப்பெரிய இன்னிங்ஸை ஆடமுடியும் என நிரூபித்தார்.

அதற்கு முன் பின்வரிசையில் இறங்கிவந்த தோனியை, அந்த போட்டியில் மூன்றாம் வரிசையில் இறக்கிவிட்டார் கேப்டன் கங்குலி. அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கொண்ட தோனி, அதிரடியாக ஆடி பாகிஸ்தான் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்து பறக்கவிட்டார். அதிரடியாக ஆடி சதமடித்த தோனி, பெரிய இன்னிங்ஸ் ஆடினார். அந்த போட்டியில் 123 பந்தில் 148 ரன்களை குவித்த தோனி, இந்திய அணி பெரிய ஸ்கோரை அடிக்க உதவினார்.

தோனியின் சதம், சேவாக் மற்றும் டிராவிட்டின் அரைசதத்தால் அந்த போட்டியில் 356 ரன்களை குவித்த இந்திய அணி அபார வெற்றி பெற்றது. தோனியின் அந்த இன்னிங்ஸ்தான் அவருக்கு இந்திய அணியில் அவருக்கான இடத்தை உறுதி செய்துகொடுத்தது. 

அதன்பின்னர் இலங்கைக்கு எதிராக 183 ரன்களை குவித்தார். அதன்பின்னர் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்த தோனி, 2007ல் இந்திய அணியின் கேப்டனாகவே ஆகிவிட்டார். அவரது வளர்ச்சி அபரிமிதமானது. அவர்  கேப்டனானதற்கு பின்னர் சாதித்தவையெல்லாம் வரலாறு.

அவர் முதல் சதமடித்த தினமான இன்றைய தினத்தில் தோனியை ரசிகர்கள் நினைவுகூர்ந்துவருகின்றனர்.