நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் ஆகிய 2 தொடர்களிலுமே சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் டெஸ்ட் அணியில் எடுக்கப்படவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக ஆடாததால், டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ராகுல், ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை.  

ஆனால் நியூசிலாந்தில் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 தொடர்களிலுமே அபாரமாக ஆடி அசத்தினார். நல்ல ஃபார்மில் இருந்த அவரை டெஸ்ட் அணியில் எடுக்கவில்லை. இந்நிலையில், வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பிய இந்திய அணி, ஒரு இன்னிங்ஸில் கூட 200 ரன்களை எட்டவில்லை. 

கோலி, புஜாரா ஆகிய நட்சத்திர வீரர்கள் மிகவும் சொற்பமான ரன்களுக்கு படுமோசமாக ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் 165 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களும் மட்டுமே அடித்த இந்திய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலுமே மயன்க் அகர்வால் மட்டுமே சிறப்பாக ஆடினார். முதல் இன்னிங்ஸில் ஓரளவிற்கு ஆடி 34 ரன்கள் அடித்த மயன்க், இரண்டாவது இன்னிங்ஸில் 59 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. 

ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி, டெஸ்ட் போட்டியிலும் படுமோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், இந்திய அணி தேர்வை கடுமையாக சாடியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள கபில் தேவ், நியூசிலாந்து அணியை பாராட்டியே தீர வேண்டும். ஒருநாள் தொடரில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து அணி, டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால், அணி தேர்வு தான் முக்கியமான காரணமாக படுகிறது. 

ஒவ்வொரு போட்டிக்கான அணியிலும் ஏன் இவ்வளவு மாற்றங்கள் செய்கிறார்கள் என்பது எனக்கே புரியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் கிட்டத்தட்ட புதிய அணி தான் களமிறங்குகிறது. அணியில் யாருமே நிரந்தரமாக இருப்பதில்லை. அணியில் ஒரு வீரருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை என்றால், அது அந்த வீரரின் ஆட்டத்தை வெகுவாக பாதிக்கும். 

பேட்டிங் ஆர்டரில் பெரிய பெரிய வீரர்கள் இருந்தும் கூட, 2 இன்னிங்ஸிலும் 200 ரன்களை கூட எட்டமுடியவில்லை என்றால், எப்படி அந்த கண்டிஷனில் ஆதிக்கம் செலுத்த முடியும். திட்டமிடுதலிலும் வியூகத்திலும் இந்திய அணி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

Also Read - ஆசியா லெவனை எதிர்கொள்ளும் உலக லெவன் அணி அறிவிப்பு.. டுப்ளெசிஸ் தலைமையிலான அதிரடி அணி

அணியை கட்டமைக்கும்போது, வீரர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும். தொடர்ச்சியாக அணியில் மாற்றங்களை செய்துகொண்டே இருப்பதில் அர்த்தமே இல்லை. அணி நிர்வாகம் ஃபார்மட் வாரியாக வீரர்களை பிரித்து, அதற்கேற்ப தேர்வு செய்கிறது. ராகுல் டாப் ஃபார்மில் இருக்கிறார். அவரை அணியில் சேர்க்காதது ஏன் என தெரியவில்லை. ஒரு வீரர் ஃபார்மில் இருக்கிறார் என்றால், அவரை ஆடவைப்பது தான் சரியாக இருக்கும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.