இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 2017ல் கேப்டன்சியிலிருந்து விலகி, கோலியின் கேப்டன்சியில் இந்திய அணியில் ஆடிவந்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் அரையிறுதியுடன் இந்திய அணி வெளியேறியது. அந்த போட்டிதான் தோனி இந்திய அணிக்காக ஆடிய கடைசி போட்டி. 

அதன்பின்னர் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக தோனி எந்தவிதமான போட்டிகளிலும் ஆடவில்லை. தோனி கிரிக்கெட்டே ஆடாததையடுத்து, பிசிசிஐ-யின் 2020ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார்.

அதனால் தோனியின் கெரியர் முடிந்துவிட்டதாக பார்க்கப்பட்டது. ஆனாலும் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி, இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கும் முனைப்பில் இருந்தார் தோனி. 

ஐபிஎல்லில் அவர் ஆடுவதை பொறுத்து அவரை அணியில் எடுக்கும் எண்ணத்தில் தான் இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் இருந்தது. அதனால் ஐபிஎல்லில் சிறப்பாக ஆட வேண்டும் என்ற முனைப்பில் எல்லாருக்கும் முன்பாக சென்னைக்கு வந்து பயிற்சியை முன்னதாகவே தொடங்கி, தீவிர பயிற்சி எடுத்துவந்தார் தோனி. 

ஆனால் இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தீவிரமானதையடுத்து இன்று தொடங்குவதாக இருந்த ஐபிஎல்  தொடர், ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. கொரோனாவின் தீவிரம் அதிகமானதால், ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. 

எனவே இனிமேல் ஐபிஎல் 13வது சீசன் நடப்பது சந்தேகமாகியுள்ளது. ஐபிஎல் நடப்பது சந்தேகமாகியிருப்பதால், இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவதற்கு அதை பெரிதும் நம்பியிருந்த தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாகவும், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தோனி இடம்பெறுவதற்கான வாய்ப்பில்லை என்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தோனியின் எதிர்காலம் குறித்து முன்னாள் ஆல்ரவுண்டரும் தோனியின் கேப்டன்சியில் ஆடியவருமான இர்ஃபான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், தோனி மீண்டும் இந்திய அணியில் இடம்பெற, கண்டிப்பாக ஏதாவது கிரிக்கெட் போட்டிகளில் ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் இந்திய கிரிக்கெட்டுக்காகவும் உலக கிரிக்கெட்டுக்காவும் அபாரமான பங்களிப்பை செய்திருக்கிறார். கேஎல் ராகுலும் ரிஷப் பண்ட்டும் கடந்த ஓராண்டாக தொடர்ச்சியாக இந்திய அணிக்காக ஆடிவரும் நிலையில், அவர்களை நீக்கமுடியாது. அப்படியிருக்கையில், தோனிக்கான இடம் கிடைப்பது சந்தேகம் தான். எனினும் அதுகுறித்து கிரிக்கெட் வாரியம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.