இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது டி20 போட்டி வெலிங்டனில் நடந்த ஜனவரி 31ம் தேதி நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் அபார வெற்றி பெற்றது. 

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 88 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் மனீஷ் பாண்டேவின் பொறுப்பான அரைசதத்தால் 20 ஓவரில் 165 ரன்களை அடித்தது. இந்த இலக்கை எளிதாக விரட்டியிருக்க வேண்டிய நியூசிலாந்து அணி, மூன்றாவது போட்டியில் சொதப்பியதை போல மீண்டும் ஒருமுறை கடைசி ஓவரில் படுமோசமாக சொதப்பியதால் போட்டி டை ஆனது. 

காலின் முன்ரோ அதிரடியாக ஆடி 47 பந்தில் 64 ரன்களை குவித்து கொடுத்தார். ஆனால் கடைசி ஓவரில் வெறும் 7 ரன்களை அடிக்க முடியாமல், டெய்லர், டேரைல் மிட்செல், சேஃபெர்ட் மற்றும் சாண்ட்னெர் ஆகியோர் ஆட்டமிழந்ததால் போட்டி டை ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 14 ரன்கள் என்ற இலக்கை அசால்ட்டாக அடித்து அபார வெற்றி பெற்றது இந்திய அணி.

Also Read - கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்.. தொடக்க ஜோடியில் மீண்டும் மாற்றம்

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின்போது, இந்திய அணி ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. சுமார் 2 ஓவர்கள் வீசும் நேரத்தை அதிகமாக எடுத்துக்கொண்டது இந்திய அணி. கள நடுவர்கள் கூறிய குற்றச்சாட்டை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஏற்றுக்கொண்டதால், இதுகுறித்து விசாரணை நடத்தப்படவில்லை. ஆனால் ஒரு ஓவர் வீசும் நேரத்திற்கு 20% வீதம் 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.