இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் ஆடவர் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், மகளிர் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. மார்ச் 8ம் தேதி வரை இந்த தொடர் நடக்கவுள்ளது. 

இன்று நடக்கும் முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 132 ரன்கள் அடித்தது. இந்திய அணியின் தொடக்க மற்றும் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா, 11 பந்தில் 10 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரராங்கனையான ஷேஃபாலி வெர்மா தொடக்கம் முதலே அடித்து ஆடி ஸ்கோர் செய்தார். வெர்மா 15 பந்தில் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

அவர் அவுட்டான பிறகு  ரன் வேகம் குறைய தொடங்கியது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வெறும் 2 ரன்னில் நடையை கட்டினார். தீப்தி ஷர்மா கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணியை கரை சேர்த்தார். அவர் 49 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து இந்திய அணி 20 ஓவரில் 132 ரன்கள் அடித்தது. 133 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது.