இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வெறும் 165 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

இந்திய அணியில் யாருமே அரைசதம் அடிக்கவில்லை. புஜாரா, கோலி ஆகிய நட்சத்திர வீரர்கள் சரியாக ஆடாததால் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் மயன்க் அகர்வால் முறையே 16 மற்றும் 34 ரன்களில் ஆட்டமிழந்தனர். புஜாராவை 11 ரன்களிலும் கோலியை 2 ரன்னிலும் ஹனுமா விஹாரியை 7 ரன்னிலும் கைல் ஜேமிசன் வீழ்த்தினார். அறிமுக போட்டியிலேயே அபாரமாக பந்துவீசி புஜாரா, கோலி, விஹாரி ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ரஹானே மட்டும் ஒருமுனையில் நிலைத்து ஆடினார். முதல் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செசனில் மழை குறுக்கிட்டதால் 55 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. முதல் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 122 ரன்கள் அடித்திருந்தது. ரஹானே 38 ரன்களுடனும் ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரிஷப் பண்ட் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அஜாஸ் படேல் அவரை ரன் அவுட் செய்தார். அஷ்வின் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரஹானேவும் 46 ரன்களில் நடையை கட்ட, இஷாந்த் சர்மா, ஷமியும் அவுட்டாக, வெறும் 165 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் டாம் பிளண்டெல் ஆகிய இருவரும் பெரிதாக ஆடவில்லை. லேதம் 11 ரன்களில் இஷாந்த்தின் பந்தில் ஆட்டமிழந்தார். 80 பந்துகள் பேட்டிங் ஆடி களத்தில் நிலைத்துவிட்ட பிளண்டெலையும் 30 ரன்களில் இஷாந்த் சர்மா வீழ்த்திவிட்டார்.

 

அதன்பின்னர் கேப்டன் வில்லியம்சனுடன் அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இருவருமே அனுபவ வீரர்கள் என்பதால் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிவருகின்றனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த கேன் வில்லியம்சன், சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிவரும் டெய்லரும் அரைசதம் அடிக்கப்போகிறார். 73 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி, அதன்பின்னர் விக்கெட்டை இழக்காமல் 150 ரன்களை கடந்து ஆடிவருகிறது. வில்லியம்சனும் டெய்லரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.