கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவிலிருந்து மக்களை காக்க தனிமைப்படுதலும் சமூக விலகலுமே ஒரே வழி என்பதால் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. 

நிலைமை தொடர்ந்து மோசமாகி கொண்டிருப்பதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்த ஆலோசனைகள் நடந்துவருகின்றன. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மக்களை காப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கை சிலர் சீரியஸாக பின்பற்றுவதில்லை. கொரோனாவின் தீவிரத்தை உணராமல் அலட்சியமாக வெளியே சுற்றித்திரிகின்றனர். அப்படி சுற்றுபவர்கள் மீது, தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலுமே போலீஸார் வழக்குப்பதிவு செய்வது, வாகனங்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது என கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரிஷி தவான், மண்டி நகரில் காரில் சென்றுள்ளார். சரியான காரணமோ, வெளியே செல்வதற்கான பாஸோ இல்லாமல் அவர் சென்றதால், அவருக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர் போலீஸார்.

இந்திய அணியின் முன்னாள், இந்நாள் பிரபல கிரிக்கெட் வீரர்கள், ஊரடங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் நிலையில், கிரிக்கெட் வீரர் ஒருவரே பொறுப்பின்றி அலட்சியமாக ஊரடங்கை மீறி காரில் சென்றுள்ளார். இந்திய அணிக்காக 2016ல் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ரிஷி தவான், ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கேகேஆர் அணிகளில் இடம்பெற்றிருக்கிறார். இவர் 68 டி20 போட்டிகளிலும் 59 முதல் தர போட்டிகளிலும் 58 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் ரிஷி தவான் ஆடியுள்ளார்.