கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2000ஐ நெருங்கிவிட்டது. கொரோனா சமூக பரவலாக மாறுவதை தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கால் தினக்கூலி தொழிலாளர்கள், மாத ஊதியதாரர்கள், சிறு குறு தொழில்முனைவோர்கள், பெரிய தொழில்நிறுவனங்கள் என அனைத்து தரப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து தரப்பினர் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார சிக்கல்களை கலைவதற்கான அறிவிப்புகளையும் சலுகைகளையும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துவருகின்றன.

நாடே இக்கட்டான சூழலில் இருக்கும் இந்த வேளையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக, நாட்டு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை செய்யுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்துவருகின்றனர். 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர், ஏற்கனவே தனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பிரதமர் கேர்ஸ் நிதிக்கு ரூ.1 கோடியையும் தனது ஒரு மாத ஊதியத்தையும் வழங்கியிருந்தார். இந்நிலையில், தற்போது தனது 2 ஆண்டுகால ஊதியத்தையும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் கேர்ஸ் நிதிக்கு தருவதாக கம்பீர் தெரிவித்துள்ளார்.

2011ல் இதே ஏப்ரல் 2ம் தேதி தான் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. அன்றைய தினம் அந்த போட்டியில் அபாரமாக ஆடி 97 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த கவுதம் கம்பீர், அதே தினமான இன்று, பிரதமர் கேர்ஸ் நிதிக்கு வாரி வழங்கி கொடுத்துள்ளார்.

 

பிரதமர் கேற்ஸ் நிதிக்கு டாடா நிறுவனம் ரூ.1500 கோடியையும் விப்ரோ நிறுவனம் ரூ.1125 கோடியையும் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடியையும் வழங்கியுள்ளன. கிரிக்கெட் வீரர்கள் சச்சின்  டெண்டுல்கர், கங்குலி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா, ரஹானே, அனில் கும்ப்ளே உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.