1983ம் ஆண்டுக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி, 2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது. 2011 உலக கோப்பையை இந்திய அணி வென்ற தருணத்தை எந்த கிரிக்கெட் ரசிகராலும் மறந்துவிட முடியாது. 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்ற பின்னர், 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணி கோப்பையை தூக்கியது. 

மும்பை வான்கடேவில் இந்தியா  மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த இறுதி போட்டியில், இந்திய அணிக்கு 275 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி. 275 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக் ஆகிய இருவரது விக்கெட்டும் விரைவிலேயே விழுந்துவிட்டது. 

அதன்பின்னர் கண்டிப்பாக பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைத்து, பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயம் கம்பீருக்கு இருந்தது. அணியின் சீனியர் வீரர் என்ற முறையில் அவருக்கு அழுத்தமும் இருந்தது.

அப்போதைய இளம் வீரரான விராட் கோலியுடன் அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தார் கம்பீர். கோலி அவுட்டானதும் தோனி களத்திற்கு வந்தார். தோனியுடனும் இணைந்து அபாரமாக ஆடிய கம்பீர், 97 ரன்களை குவித்து, இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றியை நோக்கி வீருநடை போடவைத்தார். தோனி அதிரடியாக ஆடி வெற்றிகரமாக போட்டியை முடித்து வைத்திருந்தாலும், அதற்கு அடித்தளமிட்டு கொடுத்தவர் கம்பீர். 

சச்சினும் சேவாக்கும் ஆரம்பத்திலேயே அவுட்டான போதிலும், அதன்பின்னர் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கையை கொடுத்தது கம்பீரின் இன்னிங்ஸ்தான். அந்த போட்டியில் அவரது இன்னிங்ஸ் மிக மிக முக்கியமானது. ஆனால் அவர் துரதிர்ஷ்டவசமாக 97 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டார். அதன்பின்னர் தோனி சிறப்பாக ஆடி 91 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்து சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

இந்நிலையில், உலக கோப்பையை வென்ற தினமான இன்று, தோனி சிக்ஸர் அடித்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த கிரிக் இன்ஃபோ, கோடிக்கணக்கான இந்திய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம் என்று பதிவிட்டிருந்தது.

அதைக்கண்டு அதிருப்தியடைந்த கம்பீர், கிரிக் இன்ஃபோவை டேக் செய்து, உங்களுக்கு இதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.. 2011 உலக கோப்பையை ஒரு சிக்ஸரால் வெல்லவில்லை. அந்த உலக கோப்பையை ஒட்டுமொத்த இந்திய அணியும் சேர்ந்து வென்றது. அதற்கு சப்போர்ட் ஸ்டாஃபும் காரணம். அது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வெற்றி. எனவே ஒரு சிக்ஸரை மட்டுமே பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள். அதை மட்டுமே உயர்த்தி பிடிக்காதீர்கள் என்று நியாயமான கருத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல, காட்டமாக பதிவிட்டுள்ளார்.