கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடுகின்றனர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவருகின்றனர். 

இந்நிலையில், பிரயன் லாரா, சச்சின் டெண்டுல்கரின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் எதுவென்று தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது 16வது வயதில் இந்திய அணியில் அறிமுகமாகி 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி 100 சர்வதேச சதங்களுடன் 34 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்து ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராகவும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும் திகழ்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் அவரது கெரியரில் எத்தனையோ பல சிறந்த இன்னிங்ஸ்களை ஆடியிருந்தாலும், அவற்றில் மிகச்சிறந்தது, மிகவும் கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் ஆடிய இன்னிங்ஸ் எதுவென்று பிரயன் லாரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரயன் லாரா, 16 வயதில் அறிமுகமாகி 24 ஆண்டுகள் ஒரு வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவதை கற்பனையில் கூட நினைத்துக்கூட பார்க்க முடியாது. சச்சின் அபாரமான வீரர். சச்சின் அவரது கெரியரில் பல சிறந்த இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். ஆனால் 2004ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த 241* ரன்கள் தான் அவரது கெரியரிலேயே அவர் ஆடிய மிகவும் கட்டுப்பாடான, ஒழுக்கமான, சிறந்த இன்னிங்ஸ். மிகுந்த மன உறுதியுடன் அந்த இன்னிங்ஸை ஆடினார் என்று லாரா தெரிவித்தார்.

பிரயன் லாரா குறிப்பிட்டுள்ள அந்த குறிப்பிட்ட போட்டியில் சச்சின் 436 பந்துகளில் 241 ரன்கள் அடித்தார். அந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 705 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முடியவில்லை. அந்த போட்டி டிரா தான் ஆனது. 

சிட்னியில் சச்சின் ஆடிய அந்த இன்னிங்ஸிலிருந்து, எந்த விஷயத்திற்கு எதிரான போராட்டத்திற்குமான ஒழுக்கத்தை அனைவரும் கற்றுக்கொள்ளலாம் என்று பிரயன் லாரா தெரிவித்தார்.