சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட் ஆகிய மூவரும் இந்திய கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த வீரர்கள். ஒரே காலக்கட்டத்தில் ஆடிய மூன்று தலைசிறந்த வீரர்கள் இவர்கள்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ச்சியாக இந்திய கிரிக்கெட்டுக்காக உழைத்து வருபவர் ராகுல் டிராவிட் தான். ராகுல் டிராவிட் 2015ம் ஆண்டு இந்தியா அண்டர் 19 அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பதவியில் இருந்த ராகுல் டிராவிட், பிரித்வி ஷா, ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகிய இளம் வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்தார். 

அதேபோல கேஎல் ராகுல், மயன்க் அகர்வால் ஆகிய வீரர்களின் பேட்டிங்கை மெருகேற்றி இந்திய அணிக்கு அனுப்பினார். அந்த பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட், அந்த பதவியிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவ்வாறு ராகுல் டிராவிட், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், ஓய்வுக்காலத்தில் ஜாலியாக இல்லாமல் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டுக்காக உழைத்து கொண்டே இருக்கிறார். 

ஓய்விற்கு பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்த சவுரவ் கங்குலி, பிசிசிஐயின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக தீவிரமாக இயங்கிவருகிறார். இவ்வாறு ராகுல் டிராவிட், கங்குலி ஆகியோர் இந்திய கிரிக்கெட்டுக்காக தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நண்பரான சச்சின் டெண்டுல்கர் மட்டும் ஓய்வுக்காலத்தை செம ஜாலியாக மகிழ்ச்சியுடன் அனுபவித்துவருகிறார். 

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சியாக கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது டுவிட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் பகிர்கிறார். அப்படியாக அவர் பகிரும்போதெல்லாம் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சச்சினை கிண்டலடித்துவருகிறார் கங்குலி.

அண்மையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்த புகைப்படத்தை சச்சின் டெண்டுல்கர் சமூகவலைதளத்தில் பகிர, அதைக்கண்ட கங்குலி, சில பேருக்கு மட்டும்தான் இந்த அதிர்ஷ்டம் கிடைக்கும். விடுமுறைக்காலத்தை  மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டே இருங்கள் என கங்குலி பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், லாரியஸ் ஸ்போர்ட்டிங் முமெண்ட் 2000-2020 விழாவில் கலந்துகொள்ள சச்சின் டெண்டுல்கர் ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு சென்றுள்ளார். விளையாட்டு துறையில் கடந்த 20 ஆண்டில், சிறந்த தருணமாக, 2011 உலக கோப்பையை வென்றதும், சச்சின் டெண்டுல்கரை இந்திய வீரர்கள் தோள்களில் சுமந்துகொண்டு மும்பை வான்கடே மைதானத்தை சுற்றிவந்த தருணம் தேர்வு செய்யப்பட்டது. எனவே பெர்லினில் நடந்த விழாவில் கலந்துகொண்டு லாரியஸ் விருதை வென்றார் சச்சின் டெண்டுல்கர். அதற்காக பெர்லினுக்கு சென்ற சச்சின், அங்கு எடுத்த ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy to be in Berlin for the @laureussport World Sports Awards 2020! #Laureus20 #SportsUnitesUs

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on Feb 16, 2020 at 10:50pm PST

அதைக்கண்ட கங்குலி, நான் தவறாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.. இது சச்சின் தானே என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர் வெளிநாடுகளில் இருக்கும் புகைப்படத்தை பகிரும்போதெல்லாம் கங்குலி, கருத்து பதிவிடுவதால், அவை வைரலாகிவருகின்றன.