வங்கதேசத்தின் தந்தையாக போற்றப்படும் ஷேக் முஜீபுர் ரஹ்மானின் 100வது பிறந்தநாளையொட்டி, வங்கதேச கிரிக்கெட் வாரியம் மார்ச் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஆசியா லெவன் மற்றும் உலக லெவன் ஆகிய அணிகளுக்கு இடையே 2 டி20 போட்டிகளை நடத்துகிறது. 

இந்த போட்டியில் கலந்துகொண்டு ஆசியா லெவன் அணியில் ஆட இந்திய வீரர்களை அனுப்ப வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம், பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்திருந்தது. 

இந்திய அணி சார்பில் 4 வீரர்கள் அனுப்பப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் 6 வீரர்கள் ஆசியா லெவன் அணியில் ஆடுகின்றனர். விராட் கோலி, ஷிகர் தவான், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 6 வீரர்கள் ஆசியா லெவன் அணியில் ஆட பிசிசிஐ அனுமதித்துள்ளது. 

எனவே ராகுல், கோலி, தவான், ரிஷப், ஷமி, குல்தீப் ஆகிய 6 பேரும் ஆசியா லெவன் அணியில் இடம்பெற்றுள்ளனர். உலக லெவனை எதிர்கொள்ளும் ஆசியா லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அணியில், 6 இந்திய வீரர்களை தவிர 4 வங்கதேச வீரர்கள், 2 இலங்கை வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். முஷ்ஃபிகுர் ரஹீம், தமீம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரஷீத் கான் மற்றும் முஜீபுர் ரஹ்மான் ஆகிய 2 ஆஃப்கானிஸ்தான் வீரர்களும், திசாரா பெரேரா மற்றும் மலிங்கா ஆகிய 2 இலங்கை வீரர்களும் ஆசியா லெவன் அணியில் ஆடுகின்றனர். நேபாள ஸ்பின்னர் லாமிசன்னேவும் அணியில் உள்ளார். 

ஆசியா லெவன் அணி:

கேஎல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, தமீம் இக்பால், லிட்டன் தாஸ், ரிஷப் பண்ட், முஷ்ஃபிகுர் ரஹீம், திசாரா பெரேரா, ரஷீத் கான், லாமிசன்னே, முஷ்தாஃபிசுர் ரஹ்மான், மலிங்கா, முஜீபுர் ரஹ்மான், முகமது ஷமி, குல்தீப் யாதவ்.