உச்ச நீதிமன்ற கிளையைத் தமிழகத்தில் அமைப்பது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் திமுக எம்.பி. வில்சன் உச்ச நீதிமன்ற கிளையைத் தமிழகத்தில் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு  கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் வில்சனுக்கு மத்திய சட்ட அமைச்சர் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதத்தில், ‘இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரும் ஆதரவு கொடுக்காத காரணத்தால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதனையடுத்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைப்பது தொடர்பாக நேரடியாகக் கோரிக்கை விடுத்தார். அப்போது,  ‘வழக்கறிஞர்களுக்கு ஆகும் பயணச் செலவு, வழக்கு செலவுகளை குறைக்கும் வகையில் உச்ச நீதிமன்ற கிளையைத் தமிழகத்தில் அமைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். திமுகவின் இந்தக் கோரிக்கையை ஏற்று ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற கிளையைத் தமிழகத்தில் அமைப்பது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக’ மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வில்சனுக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் உறுதி அளித்துள்ளார்.