நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேருவாரா என்பது பற்றி மாநில  தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்

. 'பிகில்' திரைப்பட வருமானம்  தொடர்பாக வருமான வரித் துறை நடிகர் விஜய், லைகா நிறுவனம், சினிமா தயாரிப்பாளர், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் இடங்களில் ரெய்டு நடந்தது. நெய்வேலியில் சூட்டிங்கில் இருந்த நடிகர் விஜயை வருமான வரித் துறை விசாரணைக்கு அழைத்து சென்றது. இந்த விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் கட்சி ஆதரவை அளித்தது.
இதுதொடர்பாக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ். அழகிரி பேசியபோது, “நடிகர் விஜய் வீட்டில் ரெய்டு நடத்துவது உள்நோக்கம் உடையது. இந்த மிரட்டலுக்கெல்லாம் நடிகர் விஜய் பயந்துவிடுவார் என பாஜக பகல் கனவு காண்கிறது” என கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் கட்சியில் சேர அழைப்பு விடுக்கப்படுமா என்று கே.எஸ். அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த கே.எஸ்.  அழகிரி, “வருமான வரித்துறை ரஜினிக்கு சலுகை வழங்கியது. ஆனால், விஜய்க்கு 24 மணி நேர அவகாசம்கூட வருமான வரித்துறை வழங்கவில்லை. இது ஏன்?  காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால், அதை மனதார ஏற்றுக்கொள்வோம். ஆனால், விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டும் என நாங்கள் அழைக்கவில்லை” என தெரிவித்தார்.