தமிழக பாஜக தலைவர் நியமன பட்டியலில் என்னுடைய பெயரும் உள்ளது என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.


நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தன்னுடைய பிறந்த நாளையொட்டி நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு வந்திருந்தார். சாமி தரிசனத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் எஸ்.வி.சேகர் பேசினார். “தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை விரைவில் நியமிக்க இருக்கிறார்கள்.  தலைவர் நியமன பட்டியலில் என்னுடைய பெயரும் உள்ளது. புதிய தலைவராக என்னை நியமித்தால், மிகச் சிறப்பாக செயல்படுவேன். தமிழகத்தில் மோடி ஆட்சியின் திட்டங்கள் குறித்து பாஜகவினர்  போதிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த தவறி விட்டார்கள். அதையெல்லாம் மக்களிடம் கொண்டுசெல்வேன். 
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் தவறான பிரசாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் வில்சனின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.  நடிகர் ரஜினி சட்டப்பேரவைத் தேர்தலின்போதுதான் அரசியலுக்கு வருவார் என்று நினைக்கவில்லை. அதற்கு முன்பாகவே ரஜினி அரசியலுக்கு வருவார்.” என்று எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.