வேலூரில் மீண்டும் போட்டியிட முடிவு செய்திருக்கிறாராம் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம். அதான். தேர்தல் முடிந்துவிட்டதே என்றுதானே நினைக்குறீங்க. இப்போ, அவர் முடிவு செய்திருப்பது மேயர் தேர்தல் என்கிறார்கள் புநீக கட்சியினர்.


வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் ஏ.சி. சண்முகம் 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திடம் தோல்வியடைந்தார். அந்தத் தோல்வியிலிருந்து ஏ.சி. சண்முகம் இன்னும் மீளவே இல்லை. இன்னும்கூட  தன்னை காலை வாரிவிட்ட விஷயங்கள் குறித்து அவருடைய நெருங்கிய நண்பர்களிடம் புலம்பிவருவதாக கூறப்படுகிறது. வேலூர் தேர்தலில் மிக நெருக்கமாக வந்து தோல்வியடைந்ததால், அவருடைய கட்சியினருக்கு புதிய யோசனை வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.


உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் தற்போது அறிவித்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்றமும் தேர்தலை நடத்த கெடு விதித்துள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாநகராட்சி மேயர் பொறுப்புக்கு போட்டியிட வேண்டும் என்று ஏ.சி. சண்முகத்துக்கு அவருடைய கட்சியினர் யோசனை கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது. நீண்ட யோசனைக்குப் பிறகு ஏ.சி. சண்முகமும் இதை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.
வேலூர் தேர்தலில் கடும் போட்டியை ஏற்படுத்திய ஏ.சி. சண்முகம் மீது அதிமுக தலைமைக்கும் நல்ல மரியாதையும் அபிப்ராயமும் ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலில் வேலூரைப் பிடிக்க ஏ.சி. சண்முகம் சரியாக இருப்பார் என்பதால், இதை அதிமுகவும் ஏற்றுக்கொள்ளும் என்றும் புநீகவினர் நம்புவதாக கூறப்படுகிறது.

புநீகட்சியினர் மத்தியில் இந்தப் பேச்சு எழுந்தாலும், மேயர் சீட்டை ஏ.சி.சண்முகத்துக்கு அதிமுக ஒதுக்குமா என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும் என்பதே யதார்த்தம்.