கருணாநிதிக்கு தன் மகள் கனிமொழி மீது உயிர் போன்ற பாசம். ’கனிம்மா!’ என்றுதான் மகளை அழைப்பார். தன் கோபாலபுரம் இல்லம், அறிவாலய அலுவலகம் ஆகியவற்றுக்கு நிகராக சி.ஐ.டி. காலனிக்கும் மிகப்பெரிய முக்கியத்துவத்தை தந்தார் அவர். காரணம், அங்குதானே கனிமொழியின் வீடு உள்ளது. சி.ஐ.டி. காலனிக்கு அவர் அடிக்கடி சென்றது, துணைவியார் ராசாத்தி அம்மாளின் கையால் சாப்பிடுவதற்காக என்பதை விட, மகள் கனிமொழியை காண்பதற்காக என்பதே நிதர்சனம். 

இப்பேர்ப்பட்ட மகள் கனிமொழியை, தன் மரணத்துக்குப் பிறகு தன்  மனைவி தயாளு வழி வந்த பிள்ளைகள் எப்படி நடத்தும்? என்பது கருணாநிதிக்கு ஒரு மனக்குறையாகவே இருந்தது. ஆனால், தன் மீதும்,  குடும்பத்து மீது ஸ்டாலின் வைத்திருந்த பாசமோ ’தம்பி ஸ்டாலின் நிச்சயம் தன் தங்கை கனியை விட்டுக் கொடுக்க மாட்டான்யா!’ என்று தனது நெருங்கிய சகாக்களிடம் கருணாநிதியை நிம்மதியாக சொல்ல வைத்திருந்தது. 

கருணாநிதியின் மறைவுக்குப் பின் தி.மு.ம. எனும் பேரியக்கமான ஸ்டாலினின் கரங்களுக்குள் முழுவதுமாக வந்துவிட்டது. கனிமொழிக்கு தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் எம்.பி. சீட் தரப்பட்டு, அவர் கடுமையாக உழைத்து எம்.பி.யானார் அவ்வளவே. மற்றபடி, கழக மகளிரணியின் மாநில செயலாளர்! எனும் பெரும் பதவியில் இருந்தும் கூட அவருக்கு எந்த முக்கியத்துவமும் வழங்கப்படுவதில்லை. 

கருணாநிதியின் பிறந்தநாள் விழா, முதலாமாண்டு நினைவு தினம் என எல்லாவற்றிலும் ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதிதான் பிரதானப்படுத்தப்பட்டார். கனிமொழியோ துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலுவுக்கெல்லாம் பிறகுதான் நிறுத்தப்பட்டார்! கருணாநிதி நினைவு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த பெண் தலைவியான மம்தா பானர்ஜியை வரவேற்க கூட கனிமொழி அனுமதிக்கப்படவில்லை. அந்த மேடையில் கனிமொழிக்கு நாற்காலியும் வழங்கப்படவில்லை. இதெல்லாம் ராசாத்தியம்மாளின் இதயத்தில் ரத்தம் வடிய வைத்தன. ஆனாலும் சூழ்நிலை கைதியாக இருக்கிறது அவரது குடும்பம்! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

இளைஞரணிக்கு சமீபத்தில்  பொறுப்பேற்ற ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் பத்து சதவீதம் கூட கனிமொழிக்கு தரப்படுவதில்லை என்பதே தி.மு.க.வின் மகளிரணி நிர்வாக பெண்களின் கோபமும், ஆதங்கமும், குற்றச்சாட்டும். குறிப்பாக கருணாநிதியின் மகளான கனிமொழிக்கு அறிவாலத்தில் பத்துக்கு பத்து சைஸில் ஒரு அறை கூட ஒதுக்கப்படவில்லை! என்பதைத்தான் மிக வருத்தமாக குறிப்பிடுகிறார்கள். 

”கனிமொழி யார்? தலைவர் கலைஞரின் மகள். பெண் சுதந்திரம், பெண்ணடிமை எதிர்ப்பு, பெண் பிள்ளைகளுக்கும் ஆண் பிள்ளைகள் போலவே சமவாய்ப்புகள் மற்றும் உரிமைகளுக்காக போராடிய மற்றும் அதை பெற்றும் கொடுத்த கலைஞரின் மகள் அவர். 

கனிமொழி எங்கள் அணியின் தலைமையை ஏற்ற பின் மிக சூப்பராக செயல்படுகிறது. கழக தலைவர் அறிவிக்கும் போராட்டங்களில் கனி தலைமையில் எழுச்சியோடு கலந்து கொண்டு கலக்குகிறோம். மற்ற கட்சிகளில் மகளிர் அணிக்கு ஆட்களை காசு கொடுத்து அழைத்து வருவர். ஆனால் எங்கள் கட்சியிலோ உறுப்பினர் மகளிரே ஆர்ப்பரிப்பாக வந்து கலந்து கொள்கின்றனர். இதற்கு ஒரே காரணம் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு நாங்கள் கொடுக்கும் மரியாதைதான். 

அப்பேற்பட்ட தலைவிக்கு தன் சொந்த அப்பாவான கருணாநிதியால் உருவாக்கப்பட்ட அறிவாலயத்தில் ஒரு அறை கூட இல்லாதது பெரும் கொடுமை. பின் எப்படி அவரால் கட்சி பணிகளை பார்க்க முடியும்? அட அறிவாலயத்தில் இல்லாவிட்டாலும் கழக கட்டிடமான அறிவகத்திலாவது கொடுக்கலாம். ஆனால் அங்கேயும் தராமல் இருக்கின்றனர். 

அறிவாலயத்துக்கு கட்சி நிகழ்வுக்கோ, கூட்டங்களுக்கோ, ஆலோசனைக்கோ வரும் எங்கள் தலைவி கனிமொழி, தனக்கென ஒரு அறையில் கெத்தாக உட்கார முடியாமல் மூன்றாவது மனுஷி போல் கால் கடுக்க அங்குமிங்குமாக நடக்கிறார், நிற்கிறார்.

தன் சொந்த கட்டிடத்தினுள், செல்ல மகளின் கால் வலியை பார்த்து தலைவர் கலைஞரின் ஆன்மா கதறிக் கண்ணீர் வடிக்கிறது. ஆனால் கனியின் அண்ணன் ஸ்டாலின் எதையும் கண்டுக்காமல் இருப்பதுதான் அவரது  இதயத்தில் வலியை உருவாக்குகிறது.” என்கின்றனர் தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் வருத்தம் பொங்க. 

தலைவரண்ணே கொஞ்சம் கவனியுங்க தங்கச்சியை!

-    விஷ்ணுப்ரியா