குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்ேவறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின் எதிரொலியாக தற்காலிகமாக என்ஆர்சி செயல்படுத்தப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் ஆட்சியல் செயல்படுத்தப்பட்ட தேசிய மக்கள்தொகை பதிவேடு வேறு, இப்போது மோடி அரசு செயல்படுத்தும் என்பிஆர் என்பது வேறு. நாங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தவுடன் இந்த என்பிஆர் எடுப்பதையும் நிறுத்திவிட்டோம். ஆனால், மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த என்பிஆரில் புதிதாக 6 கேள்விகளை மத்திய அரசு இணைத்துள்ளது.

காங்கிரஸ் அரசு 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்தவுடன் என்பிஆர் செயல்பாட்டை நிறுத்திவிட்டோம். ஆனால், என்ஆர்சி குறித்து நினைக்குக் கூட பார்க்கவில்லை. இப்போது அசாம் மாநிலத்தில் என்ஆர்சியை பாஜக அரசு செயல்படுத்திவிட்டது

அசாம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட என்ஆர்சியால் 19 லட்சம் மக்கள் நாடு இழந்து இருக்கிறார்கள். இதுதான் தேசத்து மக்களுக்கு கண்முன் இருக்கும் உதாரணம். இதேபோன்று என்ஆர்சி நாடுமுழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்ட வரப்பட்டால் என்ன நடக்கும்.
பிரதமர் மோடியும், அமித் ஷாவும் என்ஆர்சி செயல்படுத்தப்படாது என்ற வாக்குறுதியை நம்பலாம். 

ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யமாட்டார்கள். ஏனென்றால், என்ஆர்சியும், என்பிஆரும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. என்பிஆர் மட்டுமே செய்வோம், என்ஆர்சி செய்யமாட்டோம் என்று நேற்று நடந்த கூட்டத்தில் ஏன் அமித் ஷா பேசவில்லை. மிகவும் திட்டமிட்டு அந்த வார்த்தையை அவர் ஒதுக்கவிட்டார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது என்பிஆர் நடைமுறை இருந்தது வேறு, ஆனால், இப்போது மோடி அரசு என்பிஆர் கொண்டுவந்துள்ள முறையும், பொருளும் வேறு. 

நாங்கள் 15 கேள்விகள் மட்டும்தான் கேட்டிருந்தோம், ஆனால், மோடி அரசில் என்பிஆரில் கூடுதலாக 6 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அதில் கடைசியாக எங்கு வசித்தீர்கள், தாய்,தந்தையின் பிறந்த ஊர், ஓட்டுனர் உரிமத்தின் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண், இவை அனைத்தும் எதற்காகக் கேட்கிறார்கள். 


என்பிஆர் 2010-ம் ஆண்டையும் இப்போது 2020-ம் ஆண்டில் நடக்கும் என்பிஆரையும் ஒப்பிடாதீர்கள். இப்போதுள்ள என்பிஆர் என்ஆர்சியோடு தொடர்புடையது. 2010-ம் ஆண்டு என்பிஆர் சரி என்று பாஜக வாதிட்டால், நாங்கள் எடுத்துக்கொண்ட கேள்விகள் மட்டும் கேட்கட்டும். 15 விதமான கேள்விகளைக் கேட்காதீர்கள். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரானப் போராட்டத்தை நாங்கள் தூண்டிவிடுவதாக பாஜக கூறுவது வேடிக்கையாக உள்ளது.

 குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் முன்னெடுக்கிறது. இதற்கு மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பல தரப்பினரும் ஆதரவு தருகின்றனர். மக்கள் அணி திரண்டு காங்கிரஸுடன் கரம் கோர்த்து போராடுகிறார்கள். இதை எப்படி தூண்டிவிடுவதாக கூற முடியும்.

மக்கள் தொகை பதிவேடு என்பது தனியானது என பாஜக கூறுவது தவறு. மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு, மற்றும் குடியுரிமை சட்டம் என பல வார்த்தைகளில் கூறினாலும் இவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை தான். யாரை வெளியேற்ற வேண்டும் என கண்டறிவது தான் இவர்கள் நோக்கம் .இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்