Asianet News TamilAsianet News Tamil

இரட்டை இலை தோற்ற வரலாறும் இருக்கு! இலை கிடைச்சுட்டா மட்டும் ஜெயிச்சிடுவாங்களா? அக்ரஹாராவில் அதகளம் பண்ணிய தினா!

ttv dinakaran pressmeet
ttv dinakaran pressmeet
Author
First Published Nov 29, 2017, 3:26 PM IST


எடப்பாடி-பன்னீர் அணிகள் இணைப்புக்குப் பிறகு தனித்து விடப்பட்டார் டிடிவி தினகரன். இரட்டை இலை சின்னம் பெறுவதிலேயே குறியாக இருந்த அவருக்கு சின்னம் கிடைக்காமல் போனது. தேர்தல் ஆணையம், எடப்பாடி-பன்னீர் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது.

டிடிவிக்கு ஆதரவு அளித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், டிடிவிக்கு ஆதரவு அளித்து வந்த 5 எம்.பி.க்கள் முதலமைச்சர் எடப்பாடி அணிக்கு மாறியுள்ளனர்.

டிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார். மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் அவர் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்தால், தினகரனுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை, டிடிவி தினகரன் சந்திக்க இன்று பெங்களூரு புறப்பட்டுச்
சென்றுள்ளார். அப்போது அவரிடம், மீண்டும் தொப்பி சின்னத்தில் போட்டியிடுவது குறித்து அவர் ஆலோசிப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும், தேர்தலில்
வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெங்களூரு பரப்பரன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை, டிடிவி தினகரன் இன்று மதியம் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர், அவர்
செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தினகரனிடம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து கேள்வி
எழுப்பினர்.

ஆர்.கே.நகர் தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இன்று மாலை சென்னையில், அவைத் தலைவர் அறிவிக்க உள்ளதாக கூறினார். தேர்தல் சின்னமாக தொப்பி சின்னத்தையே மீண்டும் கேட்க உள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், எங்களுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி என்றும் அவர் தெரிவித்தார். அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தினகரன், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய சின்னம், ஜெயலலிதா கட்டிக்காத்த சின்னம் இரட்டை இலை. அது தற்போது துரோகிகளின் கையில் உள்ளது. மக்கள் விரோத ஆட்சி செய்கிறவர்களின் கையில் உள்ளது. அதற்கு மக்கள் பதில் சொல்வார்கள் என்றும் கூறினார். 

சசிகலா அணிக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். இரட்டை இலையை எதிர்த்து போட்டியிடும் ஒரு நிலையை துரோகிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாறும் உண்டு என்றும் கூறினார்.

பதவியில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏதாவது பிரதிபலன் எதிர்பார்த்தே செல்கின்றனர். 3 எம்பிக்கள் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் அவர்கள் சென்றார்கள். 99 சதவீத கட்சி உறுப்பினர்கள் சசிகலாவிடம்தான் உள்ளனர் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

ஜெயலலிதாவின் மகள் தான்தான் என்று கூறி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா குறித்து தினகரனிடம் கேள்வி எழுப்பியதற்கு, தெரியாத ஒரு விஷயத்துக்கு எப்படி பதில் சொல்ல முடியும் என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார், ஜோக்கர் என்று கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஜோக்கருக்கு எல்லாம் ஜோக்கராகத்தான் தெரியும் என்றும் தினகரன் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios