உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த இரண்டு வாரங்களாக தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தற்போது வரையிலும் 1024 பேர் குறைவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் 27 பேர் பலியாகி இருக்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி கல்வி நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து, தனியார் நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாதவாறு 144 தடை நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை சாமான்கள், மருந்தகங்கள், பால், இறைச்சி கடைகள் போன்றவை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் மக்கள் பெருமளவில் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் விதமாக காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகின. இதையடுத்து மத்திய அரசு அதை அதிரடியாக மறுத்து தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 21 நாட்கள் அமலில் இருக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும் அவ்வாறான திட்டம் தற்போதைக்கு மத்திய அரசிடம் இல்லை என்றும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா மறுப்பு தெரிவித்திருக்கிறார்.