என்னை யாரும் கடத்தவில்லை. நான் எனது அம்மாவுடன் செல்ல விரும்புகிறேன் என்று நீதிபதி முன்பு இளமதி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகள் இளமதி, பவானி அருகே உள்ள தருமாபுரி சலங்கப்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் செல்வனை காதலித்து மார்ச் 9ம் தேதியன்று சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே காவலாண்டியூரைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழக பிரமுகர் ஈஸ்வரன் முன்னிலையில் பெரியார் படிப்பகத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் காவலாண்டியூர் விரைந்தனர். அன்று இரவே இளமதியைக் கடத்திச்சென்ற அவர்கள், காதல் கணவன் செல்வனையும், திருமணம் செய்து வைத்த ஈஸ்வரனையும் தூக்கிச்சென்று சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் இது பட்டியல் சமூகத்தினருக்கும், மாற்று சமூகத்தினருக்குமான சாதி மோதலாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டது.

கடத்தப்பட்ட இளமதி குறித்து நான்கைந்து நாள்களாக தகவல்கள் இல்லாததால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சனிக்கிழமை ஈரோட்டை சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் என்பவருடன் இளமதி, மேட்டூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆஜரானார். பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைப்பதா, காப்பகத்திற்கு அனுப்புவதா என்ற சர்ச்சை எழுந்த நிலையில், கடைசியாக ஈரோடு ஆர்என் புதூரில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.

இந்நிலையில், மார்ச் 10ம் தேதியன்று, தனது மகளை கடத்திச்சென்றதாக இளமதியின் தாயார் பவானி காவல்நிலையத்தில் திவிக தலைவர் கொளத்தூர் மணி, காதலன் செல்வன், திவிக பிரமுகர்கள் ஈஸ்வரன், சரவணபரத் ஆகியோர் மீது புகார் அளித்து இருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பவானி ஜேஎம்-1வது மாஜிஸ்ட்ரேட் ஜீவா பாண்டியன் முன்னிலையில் அவருடைய வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் இளமதியை, பெற்றோரின் பாதுகாப்பில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார். இதையடுத்து இளமதியை, உறவினர்கள் பலத்த பாதுகாப்புடன் அவருடைய தாய் வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். செல்வன் தனது மனைவியை கடத்தி சென்று விட்டதாக அளித்த மற்றொரு புகாரில், இளமதி, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று  ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி முன் ’என்னை யாரும் கடத்தவில்லை. நான் எனது அம்மாவுடன் செல்லவிரும்புகிறேன். என்னை காவல்துறையினர் விசாரித்தனர். என்னை யாரும் கடத்தவில்லை. அம்மாவுடன் செல்ல விரும்புவதாக காவல்துறையிடம் கூறினேன். என்னுடைய வாக்குமூலத்தை காவல்துறையினரிடம் எழுத்துப் பூர்வமாக கொடுத்துள்ளேன்’என்று நீதிபதி முன்பு இளமதி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து இளமதி அவரது பெற்றோருடன் அழைத்து செல்லப்பட்டார்.