அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவினர் தாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதாக புலம்பி வருகிறார்கள். எம்.பி, தேர்தல் கூட்டணியின்போது, உஷாராக பாமக கட்சி, மாநிலங்களவையில் ஒரு சீட்டை உறுதி செய்து ஒப்பந்தம் போட்டு, அதனை வாங்கியும் கொண்டது. அப்போதே தங்களுக்கும் மாநிலங்களவையில் ஒரு சீட்டை ஒதுக்குங்கள் என தேமுதிக தலைமை கேட்டது.

 

அப்போது அதிமுக தலைமை, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பேசி அப்போதைக்கு கூட்டணி அமைத்தனர். எப்போதோ அதிமுக தலைமை கூறியதை நம்பி, தற்போது காலியான மாநிலங்களவை சீட்டை தேமுதிக தலைமை கேட்க, பகீரத முயற்சிகளை எடுத்தும் பயனில்லை. கடைசியில் அதிமுக தரப்பு முடியாது என கைவிரித்து விட்டது. 

ஆனால் ஜி.கே.வாசனுக்கு மட்டும் ராஜ்ய சபா சீட் கொடுத்துள்ளது அதிமுக. இது தேமுதிக கட்சியினரிடையே பெரும் புலம்பலை ஏற்படுத்தியிருக்கிறது.  அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த நாளில் இருந்து இன்று வரை தொடர்ந்து ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கிறது. ஏன் இன்னும் அந்த கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? என மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் தலைமையை மொய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு, ’கொஞ்சம் பொறுமையாக இருங்கள். மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் அதிக சீட்டை கேட்டிருக்கிறோம். அதையாவது வாங்கி சாதிப்போம்’எனச் சொல்லி தேமுதிக மாவட்ட நிர்வாகிகளை தலைமை குளிர்வித்து வருகிறது.