குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றி இஸ்லாமியர்களுக்கு கவலையே வேண்டாம் என்று சொல்வதற்கு ரஜினி யார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்த சட்டம் பற்றி இரண்டு மாதங்களாக கருத்து எதையும் தெரிவிக்காமல் இருந்த நடிகர் ரஜினி, அந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சில கட்சிகள் இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுவதாகவும் ரஜினி தெரிவித்தார். ரஜினியின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன, இ ந் நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்தும், சிஏஏக்கு ஆதரவாக அவர் தெரிவித்த கருத்துகள் பற்றியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா. பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக வார இதழ் ஒன்றுக்கு தா. பாண்டியன் அளித்துள்ள பேட்டியில், “விஏஓ வேலை என்றால், போட்டித் தேர்வு எழுதச் சொல்லலாம். போலீஸ் வேலை என்றால், பத்தாம் வகுப்புத் தகுதியும் உடல் தகுதியையும் பார்க்கலாம். அரசியல்வாதிகளுக்குத்தான் எந்தத் தகுதியும் தேவையில்லையே.. நல்ல புத்தி சுவாதீனம் உள்ள குடிமகன் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். 
குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றி இஸ்லாமியர்களுக்கு கவலையே வேண்டாம் என்று சொல்வதற்கு ரஜினி யார்? சட்டப்பேரவை உறுப்பினரா? ஏதேனும் கட்சியின் தலைவரா?வெறும் நடிகர். நடிப்போடு அவர் நிறுத்திக்கொள்வது நல்லது. அந்தக் காலத்து சிறுவர்களும் இளைஞர்களும் திரையில் ரஜினி பண்ணுகிற சேட்டைகளைப் பார்த்து திரையுலகில் முதலிடத்தைக் கொடுத்திருக்கலாம். அதெல்லாம் அரசியல் பேசுவதற்கான அருகதையல்ல. அவருக்கு என்ன தெரியும், என்ன  தெரியாது என்பது மக்களுக்குத் தெரியும்.” என்று தெரிவித்துள்ளார்.