ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை வன்முறை ஆக்கியது அரசாங்கத்தின் சதியே…..! டிராஃபிக் ராமசுவாமி……!
இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில், 1 பெண் உட்பட 11 பேர் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம், அனைத்து தமிழ் மக்களின் மனதிலும் பேரிடியாக இறங்கி இருக்கிறது.
100 நாட்களாக அமைதி வழியில் போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்கள், இன்றும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அறவழியில் தான் தங்கள் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் 144 தடை உத்தரவால் போராட்டத்தின் பிம்பமே திசை மாறி கலவரமாக வெடித்திருக்கிறது.
ஸ்டெர்லைட்டை எதிர்த்து மக்கள் போராடியது, ஸ்டெர்லைட் வெளியிடும் நச்சு மூலம் பரவும் பல கொடிய நோய்களில் இருந்து, தங்கள் உயிரையும், தங்கள் வருங்கால சந்ததியையும், காப்பதற்காகத்தான்.
ஆனால் அந்த போராட்டமே இன்று அவர்களின் உயிரை பறித்திருக்கிறது. ஜனநாயக நாட்டில் தங்கள் வாழ்வுரிமையை நிலை நாட்ட போராடியவர்களுக்கு நேர்ந்திருக்கும், இந்த அநியாயம் இன்று தமிழ் சமுதாயத்தையே கொந்தளித்து எழச்செய்திருக்கிறது.
இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசுவாமி, தனது முகநூல் பக்கத்தில் பின் வருமாறு தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
அதில்” உலகமே வியக்கும் படி அறவழியில் போராட்டத்தை நடத்திய எம் மக்கள், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடத்தியது வன்முறை போராட்டமா? இல்லவே இல்லை. இறந்த 8 பேரும் நெஞ்சிலும் தலையிலுமே சுடப்பட்டிருக்கின்றனர். இதுவே சாட்சி இந்த சம்பவம் அரசாங்கத்தின் சதியே என்பதற்கு” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் “ ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறையே தீ வைத்துவிட்டு தடியடி!
இன்று வாகனங்களை காவல்துறையே கொளுத்திவிட்டு துப்பாக்கி சூடு !
என்ன பாவம் செய்தனர் என் தமிழ் மக்கள் ??” என்றும் அதில் கேள்வி எழுப்பியிருக்கிறார் டிராஃபிக் ராமசுவாமி.