வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் போட்டியாக இருக்கும் என்று காந்தி மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
துக்ளக் விழாவில் பெரியார் பற்றி ரஜினி பேசியது சர்ச்சையானது. பாஜக தவிர்த்து பெரும்பாலான அரசியல் கட்சிகள் ரஜினிக்கு எதிராக வரிந்துகட்டின. இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு நெருக்கமாகவும் அரசியல் ஆலோசகர் போலவும் செயல்படும் காந்தி மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரஜினி தரப்பு நியாத்தைப் பேசிவருகிறார். அவர் பேசியதன் தொகுப்பு:
ரஜினி பாஜகவுடன் நட்போடு இருப்பதால், அவர் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டதைப் போல பேசிவருகிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி பாஜகவுடன் கூட்டணி வைத்தாரே. அப்போது திமுகவுக்கு பாஜக ஓர் இந்துத்துவக் கட்சியாகத் தெரியவில்லையா? இப்போது மட்டும் பாஜகவுடன் யார் சேர்ந்தாலும் அவர்களுக்கு இந்துத்துவா சாயத்தைப் பூசுகிறார்கள்.


ஒரு வேளை ரஜினி பாஜகவுடன் கூட்டணியே அமைத்தாலும் அதன் கொள்கைகளை ஏற்றுக்கொள்வார் என்று அர்த்தம் அல்ல. ரஜினி சமூக நலனுக்காகவே அரசியலுக்கு வருகிறார். அவர் ஆதாயத்துக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. அந்த அடிப்படையில் செயல்படவும் மாட்டார். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலானது ரஜினிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் போட்டியாக இருக்கும்.” என்று தமிழருவி மணியன்  தெரிவித்தார்.