ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் உங்கள் ஆணவத்தின் ரசிகன் நான்: Miss You அம்மு madam!

Special write up about EX CM J.Jayalalithaa
First Published Dec 5, 2017, 6:15 PM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் ஒருவருடம் ஆகிறது. அன்பில் அன்னை தெரெசாகவும், ஆற்றல்மிக்க வீரத்தில் ஜான்சிராணி, லட்சுமிபாயாகவும் இனிமையாக பழகுவதில் இளகிய மனம் கொண்டவராகவும் வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட இரும்பு மனுஷிக்கு இன்று முதலாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ஜெ.விற்கு அதிமுகவினர் மட்டுமல்லாது, எதிர்கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், அவருடன் நடித்தவர்கள் என பல்வேறு தரப்பினர் ஜெயலலிதா குறித்து தங்களது கருத்துக்களை கூறியும், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகின்றனர்.
 
அப்படி சமூக வலைத்தளத்தில் ஜெயலலிதா குறித்து பதிவிட்டு வரும் நிலையில், நாம் சமூக வலைதளங்களில் அலசி ஆராய்ந்து வந்ததில் ஒருவரின் பதிவு நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜெயலலிதாவின் ஆளுமையை அணுஅணுவாக ரசித்த அந்த பதிவை நீங்களும் பாருங்கள்...

டெல்லியில் பிரதமர் தலைமையில் முதல்வர்களின் கூட்டம்! பெரும்பான்மை மாநில முதல்வர்கள் வந்தமர்ந்துவிட்டனர். கூட்டம் ஆரம்பிக்கும் தருவாய்! பாதுகாவலர் லாபியில் திடீர் சலசலப்பு, அமர்ந்திருக்கும் முதல்வர்கள் திரும்பிப் பார்க்கின்றனர். அங்கே சட்டென்று உள்ளே நுழைகிறார் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா! அவரது கம்பீரத்தை கண்டு சில மாநில சீனியர் முதல்வர்களே ஆச்சரியப்பட்டு புன்னகைக்கின்றனர். கூட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் தமிழக முதல்வரின் டர்ன்...நுனிநாக்கு ஆங்கிலத்தில் அந்த பெண் சிங்கம் பேச்சை துவக்குகிறது. டெல்லியின் செங்கோட்டையின் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட கோப்புகளை மூடி வைத்துவிட்டு கரைகிறார்கள் அவரது பேச்சில். பல முதல்வர்கள் மீட்டிங்கிற்கு பிறகு பிரதமரிடம் தங்கள் மாநிலத்துக்கு நிதி வேண்டி காத்து நிற்க, ஜெயலலிதாவின் காரோ செங்கோட்டைவாசலை கடந்திருந்தது. 

இந்த குணத்தின் பெயரென்ன! 

இரும்பால் அடித்து உறுதிப்படுத்தப்பட்ட வறட்டு சித்தாந்தத்தோடு வாழ்பவர்கள் கம்யூனிஸ்டுகள். கூட்டணி பேச கிட்டத்தட்ட மூன்று நாட்களாக போயஸுக்கு படையெடுத்த அதன் மாநில தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை பங்களாவுக்கு வெளியே காத்திருப்போர் அறையிலேயே அமர வைத்தாராம். குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை அவர்களுக்கு என்று வாரப்பத்திரிக்கை வரிந்து வரிந்து எழுதியது. 

இது குணத்தின் பெயரென்ன?

என்னதான் தனது அமைச்சரவை சகாக்கள் என்றாலும் அவர்களை ‘எப்போது பதவி பறிபோகுமோ?’ என்ற எண்ணத்துடனே தூங்க வைப்பதும், விழிக்க வைப்பதும். மேலும் தான் ஹெலிகாப்டரில் பறக்கையில் தரையிலிருந்து அதை பார்த்து வணங்க வைப்பதும், தான் அமர்ந்து செல்லும் காரின் டயரை தொட்டு வணங்கையில் கண்டும் காணாமல் இருப்பதும், எம்.ஜி.ஆரோடு தோள் நின்று அ.தி.மு.க.வை வளர்த்தவர்கள் தன் காலில் விழுந்து ‘அம்மா’ என்று கதறுவதை தடுக்காமல் ரசிப்பதெல்லாம் ஜனநாயக நாட்டில் சர்வாதிகார தலைவி நடத்திய உதறல் காட்சிகள். 

இந்த குணத்தின் பெயரென்ன?

என்னதான் ஆட்சியமைக்கும் அளவுக்கு பலத்தை பெறாவிட்டாலும் கூட, எதிர்கட்சி அந்தஸ்தில் உட்கார இருக்கும் நபரை தனது பதவியேற்பு விழாவில் ஒன்பதாவது வரிசையில் அமர வைக்கப்பட்டதை பிற்பாடு ‘என் கவனத்துக்கு வராமல் இந்த விஷயம் நடந்துள்ளது.’ என்று பூசி மெழுகியதெல்லாம் அலேக் அரசியலல்லவா. 
இந்த குணத்தின் பெயரென்ன?

துவண்டு கிடந்த நேரத்தில் தங்கள் கட்சிக்கு தோள் கொடுத்து அபரிமிதமாக ஜெயிக்க வைத்த விஜயகாந்தை, தன் அமைச்சரவை சகா கிண்டலடிக்க, அதற்கு அவர் கோபப்பட்டதற்காக ‘இனி தே.மு.தி.க.வுக்கு வளர்ச்சி என்பதே கிடையாது. வீழ்ச்சி மட்டும்தான். எங்களுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே உங்களுக்கு வாழ்வு கிடைத்தது. இன்றோடு அது முடிந்தது.’ என்று சட்டமன்றத்தில் நடுநாயகமாக அமர்ந்து சபித்ததெல்லாம் வெறுப்பு அரசியலின் உச்சம். 

இந்த குணத்தின் பெயரென்ன?

தன் தோழியின் கணவரை தங்கள் வீட்டுப் பக்கமே வரவிடாமல் துரத்தி, அவரது தோழி மீது கஞ்சா வழக்கு போட்டு, யாரோஒரு இளைஞனை வளர்ப்பு மகனென அறிவித்து அவருக்கு கோடிகளை கொட்டி மணமுடித்து வைத்து, பின் அவர் வேண்டாமல் போனதால் கஞ்சா வழக்கு போட்டு காலி செய்ததெல்லாம் போலீஸ பொம்மையாக பயன்படுத்திய செயலல்லவா.

இந்த குணத்தின் பெயரென்ன?

வயோதிக அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் தன் பிரச்சார வேனின் கம்பியை பிடித்து தொங்கியதை ரசித்ததும், பிரச்சார சாரதி செங்கோட்டையனை அமைச்சர் பதவியை பிடுங்கி சாதாரண எம்.எல்.ஏ.வாக்கி ஒடுக்கியதும், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை சசி அண்ட்கோ உருட்டி மிரட்டியபோதெல்லாம் ஓரக்கண்ணால் ரசித்ததும் புரட்சித்தலைவர் துவக்கிய கட்சியை புண்ணாக்கிய நாட்கள்.

இந்த குணத்தின் பெயரென்ன?

செம்பரம்பாக்கம் பிளந்து கடலாய் நீர் கொட்டி சென்னை மூழ்கியபோதும், கோயமுத்தூர் வேளாண் கல்லூரி மாணவிகள் மூவர் பேருந்தோடு கொளுத்தப்பட்ட போதும், பதவியை இழந்த முன்னாள் அமைச்சர்கள் போயஸ் டூ கோட்டை சாலையில் நாயாய் நின்று கும்பிட்டு கெஞ்சியபோதும், ‘அய்யோ கொல்றாங்கப்பா’ என்று நள்ளிரவு கைதில் கருணாநிதி கலங்கியபோதும், விபச்சார வழக்கு பாய்ச்சப்பட்ட சில நடிகைகள் ‘நாங்க அப்படிப்பட்டவங்க இல்லை’ என்று கதறியபோதும், தன் படத்தை வெளியிட முடியாமல் நடிகர் விஜய் தவித்து தன் பங்களா கேட்டில் வந்து நின்ற போதும், நிரூபிக்க முடியாத குற்றங்களுக்காக ஸ்டாலின் மீது வழக்குகளாய் போட்டுத் தள்ளியபோதும், எஸ்மா டெஸ்மா தடா பொடா என்று உரிமை போராளிகளின் குரல்வளையில் போலீஸி பூட்ஸ் கால்கள் அழுத்தியபோதும், மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்து முதலீட்டாளர்கள் கண்ணீரில் மூழ்கியபோதும், மகாமக குளத்தில் கட்டிடம் தகர்ந்து பல உயிர்கள் ஜலசமாதியானபோதும் பெரிதாய் கலங்காத மனம் கொண்ட பெண்ணாய் நின்றது அழுத்த மனதின் உச்சமல்லவா!

இந்த குணத்தின் பெயரென்ன? என்று கேட்டால்...’ஆணவம், ஆணவம், ஆணவம்’ என்றே சொல்லும் உலகம். 
இப்படி ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் கூட  உங்கள் ஆணவத்தின் ரசிகன் நான்! Missu U Ammu mam!