சிசிடிவி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், உள்ளாட்சித் தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்க முடியுமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியுள்ளார். 

கொளத்தூர் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதி சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’
வரும்15-ம் தேதி நம்முடைய தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நாம் கொண்டாட இருக்கிறோம். ஆனால் முன்கூட்டியே இந்த விழாவை நாம் கொண்டாடுவதற்குக் காரணம், இது தமிழர் திருநாள்!

ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் மக்கள் பணியாற்றுவதில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஈடாக எந்தக் கட்சியும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த அளவுக்கு பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, உள்ளாட்சி அமைப்புத் தேர்தலாக இருந்தாலும் சரி, மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். நான் அந்தமான் சென்றிருந்த போது அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் என்னிடம் சொன்னது, நீங்கள் இல்லை என்றால் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று வெளிப்படையாக வெற்றி பெற்றிருக்கும் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் பேசினர். இன்னொரு வேண்டுகோள் வைத்தார்கள். 40 என்று பாண்டிச்சேரியை மட்டும் சேர்க்காதீர்கள். அந்தமானையும் சேர்த்து 41 என சேர்த்துக் கொள்ளுங்கள் எனச் சொன்னார்கள்.

41ல் தேனியைத் தவிர்த்து 40 இடங்களில் வெற்றி பெற்றோம் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த வெற்றியைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், கேலி பேசி, கொச்சைப்படுத்திப் பேசினார்கள். ‘இது ஒன்றும் பெரிய வெற்றி இல்லை. ஏமாற்றி மக்களிடத்தில் ஓட்டு வாங்கிவிட்டார்கள்’ என்றார்கள்.

‘இப்போது உள்ளாட்சியில் நீங்கள் ஓரளவு வெற்றி பெற்றீர்களே அது பொய் சொல்லியா? மிட்டாய் கொடுத்து ஏமாற்றி விட்டடார்கள் என சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னார். நாங்கள் மிட்டாய் கொடுத்தோம் என்றால், தேனியில் நீங்கள் வெற்றி பெற்றீர்களே அது அல்வா கொடுத்து பெற்ற வெற்றியா?’என்று அப்போது நான் கேட்டேன்.

வெற்றியைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அவர்கள். தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஏற்கனவே விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்கு வெற்றிபெறக்கூடிய நிலையில் இருந்தோம். ஏன் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆளுங்கட்சியாக இருக்கும் நேரத்தில் இடைத்தேர்தல் வரும் போது பெரும்பாலும் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும்.

மக்களுடைய எண்ணம் எப்படி இருந்தாலும், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல், இவற்றையெல்லாம் தாண்டித்தான் அந்தத் தேர்தலைச் சந்தித்தோம். ஆனாலும் வெற்றி வாய்ப்பை இழந்தோம். நாடாளுமன்றத் தேர்தலின் போது, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், ஏற்கனவே அதிமுகவிடம் இருந்த இடங்களில் 9 இடங்களைக் கைப்பற்றியது. அது பெரிய வெற்றி.

எதிர்க்கட்சியாக இருந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். அதற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதில் எவ்வளவு பிரச்சனை ?. தொடர்ந்து உயர்நீதிமன்றத்திற்குச் சென்றோம். உச்சநீதிமன்றத்திற்குச் சென்றோம்.

தேர்தலை முறையாக, நியாயமாக, இடஒதுக்கீடு அடிப்படையில் நடத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் சென்றோம். பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கு, மலைவாழ் மக்களுக்கான இடஒதுக்கீடு என்று அதையெல்லாம் முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்றுதான் நீதிமன்றத்திற்குச் சென்றோம். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின் போது சிசிடிவி வைக்க வேண்டும் எனக் கோரினோம்.

இதற்கிடையே வேலூர் மாவட்டத்தை 3 ஆகப் பிரித்தார்கள். விழுப்புரம், திருநெல்வேலி மாவட்டங்களை இரண்டாகப் பிரித்தார்கள். மாவட்டங்களைப் பிரித்துவிட்டுத் தேர்தல் நடத்தும் போது அதில் இடஒதுக்கீடு வழங்க சட்டச் சிக்கல் இருக்கிறது என்று நீதிமன்றத்திற்குச் சென்றோம். திமுகவின் நியாயமான கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு 9 மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் தேர்தல் நடத்த உத்தரவு போட்டது.

ஸ்டாலினோ, ஆர்.எஸ்.பாரதியோ, இங்கிருக்கும் திமுகவினரோ அல்லது திராவிட முன்னேற்றக் கழகமோ தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நினைத்தால் நிறுத்திவிட முடியுமா? நியாயம் இருந்ததை அறிந்துதான் உச்சநீதிமன்றம் தடை போட்டது. நினைத்துப் பாருங்கள். சிசிடிவி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், உள்ளாட்சித் தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்க முடியுமா?’’ என அவர் தெரிவித்தார்.