திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோயில் வைபவம் மற்றும் உற்சவங்கள் இந்து தர்ம பிரசாரத்திற்காக கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இதன் தலைவர் ஆளும் கட்சி சார்பில் நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஜெகன்மோகன் அரசு பதவியேற்ற பிறகு தெலுங்கு திரைப்பட காமெடி நடிகர் பிரித்திவிராஜ், ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர் சேனலின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு தனக்கு வேண்டியவர்கள் 30 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள  நிலையில்  பெண் ஊழியர் ஒருவரிடம் அவர் ''நீ என் இதயத்தில் இருக்கிறாய், ஐ லவ் யூ'' என்றும், ''மது அருந்துவதை நிறுத்தி இருப்பதாகவும், மது அருந்த வேண்டும் என்று நினைத்தால் அது உன்னுடன் இருக்கும்போது தான்'' என்று பேசியதோடு, ''தொலைக்காட்சி அலுவலகத்தில் பணியில் இருந்தபோது உன்னை கட்டிப்பிடிக்க நினைத்ததாகவும், ஆனால் நீ சத்தம் போடுவாய் என்ற அச்சத்தில் செய்யவில்லை'' என்றும் பிரித்திவிராஜ் பேசியுள்ளார். இது தொடர்பாக ஆடியோ வெளியாகி ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து புகார் அளித்துள்ள அங்குள்ள ஊழியர்கள் , பவித்திரமான திருமலையில்  உள்ள பத்மாவதி கெஸ்ட் ஹவுசில் அமர்ந்து மது அருந்தியது, பெண் ஊழியரோடு சல்லாபத்தில் ஈடுபட்டது, என்று ப்ருத்வி பெயரில் பல குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையில் பிரித்திவிராஜ் மேலிட உத்தரவுப்படி பதவி விலகியுள்ளார்.

இதையடுத்து டிடிடி சேர்மன் சுப்பாரெட்டி தலையிட்டு ப்ருத்விராஜ் நியமித்த முப்பத்தி ஆறு பேரில் 30 பேரை வேலையில் இருந்து நீக்கினார். பிரித்திவிராஜ் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து டிடிடி விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சுப்பாராவ் உத்தரவிட்டார்.

'ஜகன் உத்தரவுக்கு மதிப்பளித்து சேர்மன் பதவியில் இருந்து விலகுகிறேன். குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் என்னை செருப்பால் அடியுங்கள்' என்று ப்ருத்வி.செருப்பைத் தூக்கிக்  நிருபர்கள் முன்பு காட்டினார். இந்த விஷயம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.