ரஜினிகாந்தின் அரசியல் திட்டங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரவேண்டும் என அடிக்கடி கூறி வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அரசியல் மாற்றத்தை கொண்டு வர 3 திட்டங்களை அறிவித்தார்.

54 ஆண்டு ஆட்சிகளை தூக்கி எறிய வேண்டிய கால கட்டம் தற்போது ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்கு மக்கள், இளைஞர்களிடம் எழுச்சி உண்டாக வேண்டும் என்றும் கூறினார். தமிழகத்தில் பணபலம், அரசியல் பலத்துக்கு எதிராக இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், தான் முதல்வர் ஆக விரும்பவில்லை. படித்த ஒரு இளைஞர் ஒருவரை முதல்வராக்க வேண்டும் எனவும் தனது விருப்பத்தை தெரிவித்தார்

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,’’திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்!’’ என தெரிவித்துள்ளார்.

 

ரஜினிகாந்த் ஒரு தமிழர் அல்ல. தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும் என சீமான் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், தான் முதல்வர் வேட்பாளர் இல்லை என ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.