கட்சி மாறிய சட்டமன்ற உறுப்பினர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததால் முதல்முறையாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அந்த அமைச்சர் பதவியை பறித்து, எம்.எல்.ஏ-வை மணிப்பூர் சட்டமன்றத்தில் நுழைய அதிரடியாக தடை விதித்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் வெற்றிக்குப் பிறகு, கட்சி தாவுவதும் அணி மாறுவதும் இந்திய அரசியலில் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான தகுதிநீக்க வழக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் குறித்த வழக்கு ஒன்றில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்துள்ளனர். 

இதையும் படிங்க;- தெரிந்தே செய்த தவறுக்கு பதில் தெரியாமல் திணறும் ஓபிஎஸ்... 30 நாட்கள் அவகாசம் கேட்டு கோரிக்கை..!

மணிப்பூரில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஷியாம்குமார் சிங் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தலில் வெற்றிபெற்ற பின், அவர் பாஜகவில் இணைந்து மாநில வனத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் அவரை தகுதிநீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனு மீது அவர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

இதையும் படிங்க;- ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு... மணிப்பூர் எம்.எல்.ஏ. வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சபாநாயகருக்கு நெருக்கடி?

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுத்தது. அந்த வழக்கை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த நீதிமன்றம், தகுதிநீக்க மனு மீது 4 வாரங்களுக்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நாரிமன், ரவீந்திர பட் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காததை அறிந்து, அரசமைப்புச் சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஷியாம்குமார் சிங்கை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதோடு சட்டமன்ற உறுப்பினராகச் செயல்படவும், சட்டமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடைவிதித்துள்ளது. அமைச்சரவையில் இருந்து ஒரு நபரை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.

அதேபோல், தமிழகத்தில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்க புகார் மீதான வழக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விவகாரத்தில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று வழக்கை முடித்து வைத்தது. இதனையடுத்து, சபாநாயகர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் சபாநாயகர் உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு அவர்களை தகுதி நீக்கம் செய்யவும் வாய்ப்புள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.