தர்பார் படத்தில் சசிகலா பற்றிய மறைமுகமாக விமர்சித்து காட்சிகள் இருந்தால் நீக்கப்பட வேண்டும்.  இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

"தர்பார்" படத்தில் காசு இருந்தால் ஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. சவுத் இந்தியாவுல கூட கைதி அடிக்கடி ஜெயில்ல இருந்து வெளியே போய் ஷாப்பிங் செய்ததாக செய்தி பார்த்தேன் என சக காவல் அதிகாரி ரஜினியிடம் கூற, அதற்கு அவர் ஓ... என கூறுவது போன்ற வசனம் உள்ளது. 

இந்த வசனம் குறித்து அமைச்சர் ஜெயகுமார், ‘’தர்பார் படத்தில் உள்ள கருத்துக்களை நானும் கேள்விப்பட்டேன். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் படம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது. இந்த கருத்து நல்ல கருத்துதான். இது சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என எண்ணுகிறேன். இது நல்ல கருத்து’’எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இந்த காட்சிகள் குறித்து வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ‘’தர்பார் படத்தில் சசிகலா பற்றிய மறைமுகமாக விமர்சித்து காட்சிகள் இருந்தால் நீக்கப்பட வேண்டும். ஆதாரமின்றி அமைச்சர் ஜெயகுமார் பேசியுள்ளார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். வினய் குமார் அறிக்கையில் சசிகலா ஷாப்பிங் சென்றதாக எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. எனவே சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’என அவர் தெரிவித்துள்ளார்.