நிர்பயா சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் கொந்தளிப்படைய வைத்தது. இச்சம்பவத்திற்கு பின்னர் ஒட்டுமொத்த பெண்களும் விழித்துக் கொண்டனர், இனியும் நாட்டில் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடராது. இனியும் இதுபோன்ற சம்பவங்களை நம் சமூகம் பொறுத்துக் கொள்ளாது, பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை மக்களே இனி தண்டிப்பார்கள் என்றெல்லாம் உணர்வுப்பூர்வமாக குரல்கள் எழுந்தன. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறி யுள்ளது.  உத்தர பிரதேசம் மாநிலம் ஹர்தாசில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரிதாஸ் பகுதியில் 19 வயது இளம் பெண்ணை உயர் சாதியை சேர்ந்த 4 பேர்  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கியுள்ளனர், அத்துடன் அந்த பெண்ணின் முதுகெலும்பை உடைத்து, அவரின் நாக்கை அறுத்து, மென்னியை இறுக்கி அட்டூழியத்தில் அந்த கும்பல் ஈடுபட்டிருக்கிறது. இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் இருந்த  அப்பெண் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணின் உடலை குடும்பத்தாரிடம் கூட கொடுக்காமல், போலீசார் அவசர அவசரமாக எரித்துள்ளனர். ஒருமுறையாவது தங்கள் மகளின் முகத்தை காட்டுங்கள் என அவரது பெற்றோர்கள் கதறும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி காண்போரை துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. அத்தலித் சிறுமிக்கு ஏற்பட்ட இந்த அவலநிலை குறித்து சமூகவலைதளத்தில் இளைஞர்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில்  நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறத்து இந்தியா டுடேவின் புலனாய்வு பிரிவு ஆய்வு செய்து புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. 

அதில் கடந்த 2013 முதல் 2019 வரை சுமார் 2 லட்சத்து 42 ஆயிரம் கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், ஒவ்வொரு மணி நேரத்திலும் நான்கு கற்பழிப்புகள்  நடைபெறுவதாகவும், ஒவ்வொரு நாளும் தலா 95 கற்பழிப்புகள் அரங்கேறுவதாகவும், கூறியுள்ளது. அதாவது நிர்பயா சம்பவத்திற்கு பிறகும் பெண்களைப் பற்றிய சிந்தனை சமூகத்தில் மாறவில்லை என்றும், கற்பழிப்பு இந்தியாவில் ஒரு தொற்று நோயை காட்டிலும் தீவிரமாக உள்ளது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் கற்பழிப்பு வழக்குகள் 31 சதவீதம் அதிகரித்து உள்ளது எனவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேசத்தின் ஹரிதாஸ்சில் உயர்சாதி  ஆண்களால் சித்திரவதை செய்யப்பட்டு கற்பழிக்கப்பட்ட சிறுமி 15 நாட்கள் உயிருக்கு போராடி  இறந்துள்ளார். உ.பியில் கடந்த இரண்டு மாதங்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஐந்தாவது பெண் இவரென்றும், அதில் மூன்றாவது தலித் சிறுமி இவர் என்றும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.