தனக்கு பேத்தி முறைகொண்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை 63 வயது காமுகனுக்கு அவன்  சிச்சைபெற்று வந்த மருத்துவமனைக்கே சென்று தீர்ப்பளித்து அதிர்ச்சியளித்திருக்கிறார் கடலூர் நீதிபதி.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் மேலபெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சோ.சங்கரநாராயணன் (63). இவர், கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். 

இந்த வழக்கு விசாரணை கடலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி, சங்கரநாராயணனை குற்றவாளி என அறிவித்தார். இதை கேட்டதும், சங்கரநாராயணன் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து, நீதிபதியின் அறிவுறுத்தலின்படி, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சங்கரநாராயணன், தனது உடல்நிலையை காரணமாக தெரிவித்து ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி டி.லிங்கேஸ்வரன், நேற்று மாலை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். 

பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கரநாராயணனை சந்தித்த நீதிபதி, பாலியல் தொல்லை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், கொலைமிரட்டல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக தீர்ப்பளித்தார். பின்னர், அது தொடர்பாக அவரிடம் கையெழுத்து பெற்றுத் திரும்பினார். 

ஒரு குற்றவாளிக்கு அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கே சென்று நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.