கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை அமெரிக்கா மிஞ்சியிருக்கிறது. அமெரிக்காவுக்கே இந்த நிலை எனும் போது நமது நிலை? என பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘’உலகின் ஈடு இணையற்ற வல்லரசான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நேற்று ஒரே நாளில் 17,507 பேரை கொரோனா வைரஸ் நோய் தாக்கியிருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 256 பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு பலியாகியுள்ளனர். 

கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை அமெரிக்கா மிஞ்சியிருக்கிறது. சீனாவில் இதுவரை 81,285 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 85,268 ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவுக்கே இந்த நிலை எனும் போது நமது நிலை? எனவே விழிப்புடன் இருப்போம், விலகி இருப்போம்!

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி உள்ளிட்ட மலர் வகைகளை பறித்தும், கொரோனா அச்சம் காரணமாக சந்தைப்படுத்த முடியவில்லை. வாங்க ஆளில்லை. அதனால் டன் கணக்கில் மலர்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன!

மலர்கள் குப்பையில் கொட்டப்படுவதால் மலர் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கான ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். அவர்களின் இழப்பை அரசும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்காக மலர் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.