உங்கள் இரு சக்கர வாகனங்களை வீடுகளுக்குள் விட்டு பூட்டி வையுங்கள் அதுவே  கொரோனா தடுப்புக்கு நீங்கள் செய்யும் பெருந்தொண்டு என ராமதாஸ் கூறியுள்ளார். 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக, இந்தியா முழுவதும் 21நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வாகனங்களில் சுற்றக்கூடாது என்றும் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனாலும், பொதுமக்கள் அச்சமின்றி வெளியில் உலா வருகின்றனர். அதேபோல், இளைஞர்களும் கட்டுப்பாடு இல்லாமல் கைப் ரேஸில் ஈடுபடுபவர்களுக்கு ராமதாஸ் அட்வைஸ் செய்துள்ளார். 

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களுக்கு ஓர் வேண்டுகோள்: உங்கள் இரு சக்கர ஊர்திகளை வீடுகளுக்குள் விட்டு பூட்டி வையுங்கள். அத்தியாவசியத் தேவைக்காக அன்றி வேறு எதற்காகவும் அவை சாலைகளை எட்டிப் பார்க்கக் கூடாது. அதுவே கொரோனா தடுப்புக்கு நீங்கள் செய்யும் பெருந்தொண்டு.

இளைஞர் சக்தி நினைத்தால் இமயத்தையும் இழுத்து வர முடியும். அப்படிப்பட்ட உங்களால் தான் தமிழ்நாட்டு மக்களைக் காக்க முடியும். நாட்டு மக்களின் உயிர்கள் உங்கள் கைகளில் இருப்பதாக கருதிக் கொள்ளுங்கள். அவர்களை பாதுகாப்பதற்காக சாலைகளுக்கு வராமல் வீட்டிலேயே மகிழ்ச்சியாக வாழுங்கள்.

 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அரசு வழங்கியுள்ள அறிவுரைகளை முழுமையாக கடைபிடியுங்கள். சமூக இடைவெளிக்கு உதாரணமாக வாழுங்கள். வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆலோசனை வழங்குங்கள். அரசுக்கு முழுமையாக ஒத்துழையுங்கள். விரைவில் கொரோனா இல்லாத தமிழகம் காண உதவுங்கள் என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.