மோடியை ஓவர் டேக் பண்ணுவார் சூப்பர் ஸ்டார்:  கெத்து காட்டும் ரஜினி ரசிகர்கள், டென்ஷனாகும் பா.ஜ.க.

ஆயிரம் சர்ச்சைகள் இருக்கட்டும் ஆனாலும் ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனித்தீர்களா? கடந்த சில மாதங்களாகவே ரஜினிகாந்த் மிகப் பெரிய அளவில் முன்னிலைப்படுத்தப்படும் மனிதராக ஆகிக் கொண்டே இருக்கிறார். அதிலும் குறிப்பாக டிஸ்கவரி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ ஹீரோ பியர் கிரில்ஸுடன் அவர் இணைந்து வன சாகசம் செய்ததெல்லாம் சர்வதேச அளவில் அவரை கவனிக்க வைத்துள்ளது. 

கடந்தாண்டு இந்த நிகழ்ச்சியானது பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று உத்தரகாண்ட் ஜிம்கார்பெட் உயிரியல் பூங்காவில் படமாக்கப்பட்டது. அதில் இந்தியாவின் வி.வி.ஐ.பி.யான நம் பிரதமர் மோடி  கலந்து கொண்டார். அதன் பின் இந்த நிகழ்ச்சியானது இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகிவிட்டது. 

இந்த நிலையில்தான் ரஜினிகாந்தை அணுகியது டிஸ்கவரி டீம். முதலில் மறுத்து காலம் தாழ்த்தினார். ஆனாலும் தொடர்ந்து அவரிடம் பேசி கன்வின்ஸ் செய்தனர். ’நீர் பாதுகாப்பின் அவசியத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கப்போகிறது’ என்று சொன்னபோது கொஞ்சம் யோசித்தார். அதன் பின் டெல்லியிலிருந்தே ரஜினிக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சொல்லி சிபாரிசு வந்தது. ’நீங்க பண்ணினால் ரீச் அதிகம் இருக்கும். நாட்டுக்கு பண்ற நல்ல விஷயம் இது.’ என்றனர். உடனே ஓ.கே. சொன்னார். அதன் பிறகு பல உயிரியல் பூங்காக்களை ஆராய்ந்து, கடைசியில் எல்லா வகையிலும் ரஜினிக்கு ஏற்ற (!?) கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வன சரணாலயத்தை தேர்வு செய்தனர். 

ரஜினியை இந்த நிகழ்ச்சிக்கு அதிகம் சிபாரிசு செய்தது எங்கள் இயக்கம்தான்! என்று பா.ஜ.க.வினர் பெருமை பேசிக் கொண்டிருந்தனர் துவக்கத்தில். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக ‘ஏன் அவரை இதில் பங்கேற்க வைத்தோம்!’ எனும் ரேஞ்சுக்கு கடுப்பாகி இருக்கிறார்கள். அவர்களை இப்படி நினைக்க வைத்திருப்பது வேறு யாருமில்லை, சாட்ஸாத் ரஜினி ரசிகர்களேதான். 

எப்படி?

ரஜினி சும்மா ஏர்போர்ட்டில் நடந்து சென்றாலே கூட அந்த விஷயத்தை வைத்து ஓவராய் ஸீன் செய்து, வைரலாக்குவது அவர் ரசிகர்களின் இயல்பு. இந்நிலையில் இப்படியொரு நிகழ்வில் கலந்து கொண்ட தங்கள் தலைவரை பற்றி சமூக வலைதளங்களில் ஓவராய் பாராட்டி எழுதித் தள்ளுகின்றனர். 

அதில் சிலர் “பியர் கிரில்ஸுடன் அமெரிக்க மாஜி அதிபராயிருந்த ஒபாமா கலந்து கொண்ட நிகழ்ச்சி ரெக்கார்டு பண்ணியது. அவ்வளவு பார்வையாளர்கள் அதை ரசித்தனர். அதன் பின், பிரதமர் மோடி இதில் கலந்து கொண்ட பின், அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கையோ ஒபாமா வீடியோவை பிரேக் பண்ணியது. 

ஆனால் எங்கள் தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள வீடியோ வெளியான பின் அது ஒபாமா, மோடி இருவரின் சாதனைகளையும் பிரேக் பண்ணி, ஃபிளாக்பஸ்டர் ஹிட்டாகிவிடும். நிச்சயம் உலகமெங்கும் இருந்து அவ்வளவு கோடி பார்வையாளர்கள் பார்ப்பார்கள் அதை!” என்று ஓவராய் கொண்டாடி இருக்கின்றனர். 
இதுதான் பா.ஜ.க.வினரை கடும் கடுப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

சர்தான்!