ரஜினி முதல்வராகும் வாய்ப்பையும் பெறுவார். அவர் அரசியலுக்குள் நுழைந்த பிறகு அவரோடு கைகோர்க்க ஏராளமான மக்கள் விரும்புகிறார்கள் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 13-ம் தேதி ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார். தான் முதல்வராக மாட்டேன், கட்சியும் ஆட்சியும் தனித்தனியாக இருக்கும், இளைஞர்களுக்கு வாய்ப்பு, தேர்தலுக்கு பிறகு கட்சிப் பதவிகள் பறிப்பு என்று தன்னுடைய திட்டங்களை அறிவித்தார். இதை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள். மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. ரஜினியை கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னிறுத்திவரும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், ரஜினியின் பேட்டிக்கு பிறகு கருத்து எதையும் தெரிவிக்காமல் இருந்துவந்தார்.
இந்நிலையில் ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு தமிழருவி மணியன் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் ரஜினியின் பேட்டி குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார். “வேறு ஒருவரை முதல்வராக முன்னிறுத்தப் போவதாக ரஜினி சொல்லியிருப்பது அருடைய தனித்தன்மையைக் காட்டுகிறது. 1 சதவீத ஓட்டுக்கூட இல்லாத கட்சிகளின் தலைவர்கள்கூட முதல்வராக வருவோம் என்று சொல்கிறார்கள். ஆனால், ரஜினிக்கு லட்சக்கணக்கான ஆதரவாளர்களும் ரசிகர்களும் இருந்தும்கூட, அவர் முதல்வர் நாற்காலி மீது விருப்பம் இல்லை என்று கூறுகிறார். இதுதான் ரஜினியின் பெருமை.


காமராஜர் ஆட்சியைப் பணியைவிட்டு கட்சிப் பணிக்கு சென்றவர். ஆனாலும், மாதிரி அரசியல்வாதி என்றால் இப்போதும்கூட காமராஜரைத்தான் சொல்கிறோம். காந்தியின் மகத்துவம் என்பது அவர் பிரதமர் ஆகாததில் உள்ளது. ஜெயபிரகாஷ் நாராயண் புரட்சிக்கு தலைமை தாங்கியிருந்தாலும், ஜனதா அரசாங்கத்துக்கு அவர் தலைமை தாங்கவில்லை. ஆனால், ரஜினி முதல்வராகும் வாய்ப்பையும் பெறுவார். அவர் அரசியலுக்குள் நுழைந்த பிறகு அவரோடு கைகோர்க்க ஏராளமான மக்கள் விரும்புகிறார்கள். அவர்தான் வெற்றி பெறுகிற குதிரை என்பதை அறிந்திருக்கிறார்கள். இந்தப் பதவிக்காலம் முடிந்த பிறகு அதிமுக சீட்டுக் கட்டாய் சரிந்துவிடும். திமுகவின் ஓட்டு வங்கி 20 முதல் 25 சதவீதமாக உள்ளது. சிறுபான்மையினருக்கு அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் 13 சதவீத வாக்கு வங்கியை பலப்படுத்த மட்டுமே இது துணைபுரியும்.
ரஜினி பின்வாங்கவில்லை. அவர் கட்சியைத் தொடங்க உள்ளார். மாநிலம் முழுவதும் மக்களைச் சந்திப்பார். கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையே ஒரு கோடு இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இது ஓர் ஆரோக்யமான போக்கு. கட்சி கருதுவதை அரசாங்கம் செயல்படுத்தும் என்றும் முதல்வர் சிஇஓ-வாக மட்டுமே இருப்பார் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் அரசாங்கத்தை கண்காணிப்பார். புனித ஜார்ஜ் கோட்டையை அலங்கரிக்கும் அவரது உருவப்படங்களை அவர் விரும்பவில்லை என்று அவர் என்னிடம் கூறினார். புதிய திறமைகளுக்கு வழிவகுப்பது, மாசுபட்ட அரசியலை மாற்றுவதில்தான் குறியாக இருக்கிறார்” என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
ரஜினி முன்னிறுத்தும் முதல்வர் முறைகேட்டில் ஈடுபடமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்விக்கு, “நம்மிடம் ஒரு கவர்ச்சிகரமான  தலைவர் இருந்தால் அது நடக்காது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் சசிகலாவை எதிர்க்க முடியும். ஓ.பன்னீர்செல்வத்தின் முதல்வர் அலுவலகத்தை ஜெயலலிதா தன்னுடைய கண்காணிப்பு வளையத்தின் கீழ் இரண்டு முறை வைத்திருந்தார். ஒரு கவர்ச்சியான கட்சித் தலைவருக்கு எதிராக ஒரு முதல்வரோ அல்லது அமைச்சரோ செயல்பட முடியாது.


எழுச்சி மக்களிடம் ஏற்பட வேண்டும் என்று ரஜினி சொல்கிறார் என்றால், மக்கள் தங்கள் விருப்பப்படி அரசியல் மாற்றத்திற்காக அணிதிரள மாட்டார்கள். கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் அரசைச் சுரண்டுவதாகவும், மக்கள் அவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர்கள் ஏன் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தவில்லை என்று அவர் ஆச்சரியப்படுகிறார். கிளர்ச்சியின் முதல் குரல் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்துதானே வர வேண்டும். ” என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.