சசிகலா குடும்பத்திற்குள் நடக்கும் யுத்தம் - ஃபேஸ்புக்கில் நேரடி மோதல்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் விலக வேண்டும் என்றும் அதிமுகவினர் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து டிடிவி தினகரன் பதவி விலகுவதாகவும், அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். ‘கட்சியோ ஆட்சியோ, பிளவுபட நான் காரணமாக இருக்க மாட்டேன்’ என்றும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து தனது முகநூலில் கருத்துத் தெரிவித்திருந்த சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானாந்த், “யாருக்கும் இடமில்லை, சசிகலாவைத் தவிர... சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என அமைச்சர்கள் தற்போது முடிவு செய்துள்ளதை, சில மாதங்களுக்கு முன்பாகவே நாங்கள் பரிந்துரை செய்திருந்தோம். இது தாமதமான முடிவு என்றாலும் புத்திசாலித்தனமான முடிவு”என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பின்னூட்டத்தில் பதிலளித்துள்ள இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன், “நடப்பவை கழகத்துடைய நன்மைக்கானவை அல்ல , மாறாக , கழகம் சுக்குனூறாக ஆவதற்கான வாய்ப்பை இவை உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கும் பதிலளித்த திவாகரனின் மகன் ஜெயானாந்த், “அமைச்சர்களின் முடிவுக்கு முன்னால் நடந்ததெல்லாம் நல்லதாக இருந்திருந்தால் ஏன் இப்படி ஒரு முடிவுக்கு கழகம் தள்ளப்பட்டது...?
கழகம் நோய்வாய் பட்டதிலிருந்து.. மீள ஒரு சில கசப்பான மருந்து தேவை..” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து இருவரும் பலரின் பின்னூட்டங்களுக்கு பதிலளித்துள்ளனர். இதில், இருவரும் அமைச்சர்களின் முடிவை வரவேற்றும், எதிர்ப்பும் தெரிவித்தும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், சசிகலா குடும்பத்திற்கு பிரச்சனை உருவாகி வருவதாக அதிமுகவினர் கருதுகின்றனர்.