தினகரன் கைதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் குலுங்கியது மேலூர்...
டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக அம்மா அணியினர் மதுரையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட அதிமுகவின் பிரதான சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் சுகேஷ் சந்திரா என்ற புரோக்கருக்கு லஞ்ச பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து டிடிவி தினகரனும் சுகேஷ் சந்திராவும் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த பண பரிவர்த்தனைக்கு உதவிய டிடிவி தினகரன் நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார்.
பின்னர், இருவரையும் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் அவகாசம் முடிவடைந்த நிலையில், இருவரும் திஹார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக அம்மா அணியினர் மதுரை மேலூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ சாமி, அதிமுக அம்மா அணி கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.