தமிழக அரசியல் பெரும் தலைவர்கள் ஜனநாயக சித்தாந்தத்தை பெருமளவுக்கு கடைப் பிடித்தவர்களில் மிக முக்கியமானவர் கருணாநிதி. கொஞ்சம் முயற்சித்தாலும் போதும் எளிய தொண்டனும் அவரை நேரில் சந்தித்து விடலாம். ஆனால் அவரது மகனான ஸ்டாலின் ஏக கெடுபிடிகலைக் காட்டாவிட்டாலும் கூட, தன்னைச் சுற்றி கணிசமான கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டுதான் வாழ்கிறார். அவரை அவ்வளவு எளிதில் சாதாரண தொண்டன் மட்டுமில்லை கீழ் மட்ட நிர்வாகிகளே நெருங்க முடியவில்லை! என்று புலம்பல் இருக்கிறது. 

இந்நிலையில் இது புதிய விவகாரம். அதாவது, அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்திக்க வேண்டுமென்றால், முன் அனுமதி பெற வேண்டிய சம்பிரதாயம் இருக்கிறது. முன்பெல்லாம் அன்பகம் கலை இந்த விஷயங்களைக் கவனித்து வந்தார். அவர் மூலமாக முன் அனுமதி வாங்கிவிட்டு, அறிவாலயத்தில் ஸ்டாலின் அறை முன் சென்று நின்று, அடுத்தடுத்து சந்தித்துக் கொள்ளலாம். இதில் ஒரு ஒழுங்கு இருந்தது. 

ஆனால் இப்போது ஒரு புதிய கேரக்டரின் வரவால் இந்த சிஸ்டமே சீர்குலைந்து விட்டது! என்கிறார்கள். அந்த கேரக்டர் மிஸ்டர். பூச்சி முருகன். இது பற்றி பேசும் தி.மு.க.வினர் “கடந்த சில காலமாக இந்த பூச்சி முருகனை ஸ்டாலினின் அருகிலேயே, நிழலாய் பார்க்க முடிகிறது. யார் இவர், எத்தனை வருடங்களாக கட்சியில் இருக்கிறார்? கட்சிக்கும், தளபதியின் வளர்ச்சிக்கும் இவர் உழைத்துக் கொட்டியது என்னென்ன? தளபதியின் பர்ஷனல் விஷயங்களுக்காக யாரை வேண்டுமானாலும் பணியில் வைத்துக் கொள்ளட்டும் தவறில்லை. 

ஆனால் கட்சி விஷயத்திலும் பூச்சி முருகனை ஆட விடுவது என்ன நியாயம்? தளபதி அறையின் வாசலில் துவாரபாலகனாக நின்று பூச்சி செய்யும் துவம்சங்கள் தாங்க முடியலை. அன்பகம் கலையிடம் சொல்லி அனுமதி பெற்றுவிட்டாலும் கூட பூச்சியை தாண்டி உள்ளே சென்று தலைவர் ஸ்டாலினை காண முடிவதில்லை.

பூச்சி நினைத்தால் மட்டுமே உள்ளே நுழையும் வாய்ப்பு கிடைக்கிறது. சினிமா பேர்வழியான பூச்சியை கட்சிக்குள் இப்படி தலைவர் தன் நிழலாய் வைத்துக் கொண்டிருப்பது சரியில்லை. சினிமாவில் மாஸ் ஹீரோக்களுக்கு கும்பிடு போடும் பி.ஆர்.ஓ.க்கள், திறமையுள்ள ஆனால் பிரபலமாகாத நபர்களை கேவலமாய் பார்ப்பார்கள். பூச்சியும் அப்படித்தான் அரசியலில் நடந்து கொள்கிறார். 

இது தலைவருக்கும், கீழ்நிலை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இடையில் பெரும் இடைவெளியை உருவாக்கியுள்ளது. தொல்லைப்படுத்தும் இந்த பூச்சி முருகனை தொலைவில் நிறுத்த வேண்டியது அவசியம்.” என்று கூவுகிறார்கள். ஆனால் பூச்சி முருகனோ இதற்காக பெரிதும் கலங்காமல் ‘மாற்றம் என்பது அரசியலும் உண்டு. தலைவர் ஸ்டாலின் அரதபழைய அரசியல் செயல்பாடுகளை விட்டு தன்னை ஹைடெக் ஆக்கிக் கொண்டிருக்கிறார். 

அந்த முயற்சியில் தன்னை சுற்றி நிற்கும் நபர்களிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு கூட அதில் ஒன்றாக இருக்கலாம். நான் அனுமதி வாங்கி வைத்திருக்கும் யாரையும் தலைவரை சந்திக்கவிடாமல் தடுப்பதில்லை. நேர்மையாகவும், தெளிவாகவும்தான் நடக்கிறேன். இன்னொன்று, நான் தவறாக நடந்தால் அடுத்த நொடியே தலைவரின் பார்வைக்கு அது சென்று தண்டனை கிடைத்துவிடும். எனவே சினிமாக்காரன் என்று சொல்லி என்னை தி.மு.க.விலிருந்து பிரித்தாள நினைப்பது அறிவீனம்.” என்கிறார் விமர்சகர்களை நோக்கி. ஓஹோ!