நாடு முழுவதும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விடாமல் தொடர்ந்து வலியுறுத்தினோம்; இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தினோம் அதைதான் பிரதமர் அறிவித்திருக்கிறார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்புக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கொரோனா பரவலைத் தடுக்க இதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும்!
நாடு முழுவதும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விடாமல் தொடர்ந்து வலியுறுத்தினோம்; இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தினோம் அதைதான் பிரதமர் அறிவித்திருக்கிறார். இது மிகுந்த நிம்மதியளிக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. நாடு முழுவதும் 21 நாட்களுக்கான ஊரடங்கு ஆணையை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள வாழ்வாதார உதவிகள் ஊரடங்கை பாதிக்காமல் மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட வேண்டும்!” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.