அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு வருங்கால வைப்பு நிதி செலுத்தத் தேவையில்லை. அவர்கள் பங்கையும், உரிமையாளர் பங்கையும் அரசே செலுத்தும் என மத்திய அரசு அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர் மற்றும் ஏழைகள், கூலி தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். மத்திய நிதியமைச்சரின் இந்த அறிவிப்புகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பாமக நிறுவனார் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- கொரோனா வைரஸ் அச்சத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 80 கோடி ஏழை மக்களுக்கு மத்திய அரசு ரூ.1.70 கோடி அளவுக்கு பல்வேறு உதவிகளை மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வாடும் மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும்!

அடுத்த 3 மாதங்களுக்கு ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 5 கிலோ இலவச அரிசி, பருப்பு, ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ.500, மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவது பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும்!

 

அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு வருங்கால வைப்பு நிதி செலுத்தத் தேவையில்லை. அவர்கள் பங்கையும், உரிமையாளர் பங்கையும் அரசே செலுத்தும் என மத்திய அரசு அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது!

வருங்கால வைப்பு நிதியில் உள்ள தொகையில் 75% தொகை அல்லது 3 மாத ஊதியத்தை பணியாளர்கள் முன்பணமாகப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும் என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.