மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய விவகாரம் தேமுதிக நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தே.மு.தி.க. நிர்வாகிகள் மத்தியில் தற்போது கோஷ்டிபூசல் வெடித்துள்ளது.

எந்த ஒரு தேர்தல் வந்தாலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்ட செயலாளர்களை அழைத்து அவர்களிடம் கருத்து கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க மாவட்ட செயலாளர்கள் விரும்பினர். அவர்கள் கருத்துப்படியே அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். 

அதேபோல் கடந்த 2014 மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர மாவட்ட செயலாளர்கள் விரும்பினர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பாஜக கூட்டணியில் தேமுதிக இணைந்தது. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தினர். அப்படி திமுக கூட்டணி அமைத்தால் மாபெரும் வெற்றி பெறலாம் என்று மாவட்ட செயலாளர்கள் கருத்து கூறினர். ஆனால் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க. தோல்வியை சந்தித்தது.

 

இந்நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுக அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைவதற்கு விஜயகாந்த் விரும்பினார். இதற்கான முற்சிகள் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படுவதற்குள் பா.ம.க.வுக்கு அதிக தொகுதிகளை அ.தி.மு.க. வழங்கியதால் தே.மு.தி.க. அதிர்ச்சி அடைந்தது. பாமகவுக்கு ஒதுக்கியது போல தங்களுக்கும் அதைவிட கூடுதலான தொகுதி ஒதுக்கவேண்டும் என தேமுதிக தொடர்ந்து கூறிவந்தது. அதற்கு அ.தி.மு.க. உடன்படவில்லை. ஆனாலும் தேமுதிக கூட்டணியில் இடம் பெறவேண்டும் என பாஜக தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது. 

இந்நிலையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பலரது கருத்தும் தி.மு.க. கூட்டணியில் சேர வலியுறுத்தினர். ஆனால் சுதீஷ் மற்றும் பிரேமலதா தொடர்ந்து அ.தி.மு.க. அணியில் சேரவே பேச்சு நடத்தி வந்தார். அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்.

 

இந்நிலையில் விஜயகாந்தை சந்தித்த மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், மோகன்ராஜ், இளங்கோவன்ம், அனகை முருகேசன் ஆகியோர் தி.மு.க. கூட்டணிக்கு நாங்கள் முயற்சி எடுக்கலாமா? என கேட்டுள்ளனர். அதற்கு விஜயகாந்த் 'சரி முயற்சித்து பாருங்கள்' என கூறியுள்ளார். இதையடுத்து நேராக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டுக்கு இளங்கோவன், முருகேசன் ஆகியோர் சென்றுள்ளனர். இத்தகவலை பத்திரிக்கையாளர்களுக்கு பரப்பி தே.மு.தி.க.வின் பெயரை கெடுத்து விட்டது துரைமுருகன் தரப்பு. விஜயகாந்தின் உடல் நலம் விசாரிக்க வந்த போது 'தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எங்களிடம் அரசியல் பேசினார் என பிரேமலதா கூறியதற்கு தற்போது பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.