கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் நாடும் முழுவதும் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் வெளி மாநிலங்களில் தவித்து வருகின்றனர். இதனிடையே குழந்தைகளையும் ஏழை தொழிலாளர்களையும் மோடி அரசு கைவிட்டு விட்டதா என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும்போது ஏராளமான குழந்தைகள் மற்றும் அன்றாடத் தொழிலாளர்கள் உணவின்றித் தவித்து வருகின்றனர் என்பது தெரிகிறது. பிரதமர் மோடியும், மத்திய நிதியமைச்சர் சீதாராமனும் எதற்காக காத்திருக்கின்றனர்? கிராமங்களை நோக்கி நடந்தே செல்லும் வேலையில்லாத தொழிலாளர்களை அரசு இதுவரை பார்க்கவில்லையா?  ஏழை மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்ய பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் 24 மணி நேரத்தில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

 

ரூ 5 லட்சம் கோடி தேவைப்படும் சூழ்நிலையில் ரூ. 1 லட்சம் கோடி மட்டும் ஒதுக்கிய அரசைப் பற்றி என்ன சொல்வது? இதற்குக் காரணம் அரசின் அறியாமையா? அரசுக்குச் சொல்லப்படும் தவறான யோசனைகளா? நிர்வாகத் திறமையின்மையா? மத்திய அரசுக்கு மட்டுமே பணத்தை அச்சடிக்கும் அதிகாரம் உள்ளது. மாநில அரசுகளுக்கு இல்லை. எனவே, மாநில அரசுகளுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும்' எனப் பதிவிட்டுள்ளார்.