தங்கள் அறிவுரையை ஏற்று 5-4-2020 அன்று எங்கள் வீடுகளில் விளக்கேற்றுவோம். மாறாக, எங்கள் வேண்டுகோள்களுக்குத் தாங்கள் செவி மடுப்பீர்களா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த  தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காணொளி மூலம் இன்று பேசிய பிரதமர் மோடி,  “ஊரடங்கை கடைபிடித்து வருவதில் இந்தியா முன்னுதாரணமாக இருந்து வருகிறது” என்று  தெரிவித்தார். மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.


இந்நிலையில் பிரதமரின் இந்தக் காணொளி உரையாடலை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில், “அன்புள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு, தங்கள் அறிவுரையை ஏற்று 5-4-2020 அன்று எங்கள் வீடுகளில் விளக்கேற்றுவோம். மாறாக, எங்கள் வேண்டுகோள்களுக்குத் தாங்கள் செவி மடுப்பீர்களா?

 
ஏழை, எளிய மக்களுக்கு, குறிப்பாக நிதியமைச்சர் அறவே மறந்து விட்ட பிரிவினருக்கு, ஒரு தாராளமான வாழ்வாதாரத் திட்டத்தைத் தாங்கள் அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம். பொருளாதாரச் சரிவைத் தடுத்து, குலைந்து விட்ட பொருளாதாரத்தை உயிர்ப்பிக்க நடவடிக்கைகளை அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆறுதலும் நம்பிக்கையும் தரும் எந்த அறிவிப்பும் வரவில்லையே?” என்று ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.